SuperTopAds

வரவுசெலவுத்திட்டம் சாதாரண மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதாலேயே ஆதரவு!

ஆசிரியர் - Admin
வரவுசெலவுத்திட்டம் சாதாரண மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதாலேயே ஆதரவு!

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் வரவு,செலவுத்திட்டம் சாதாரண மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் முன்மொழிவுகளைக் கொண்டிருந்தமையால் அதனை ஆதரிக்கும் தீர்மானத்தினை எடுத்ததாக, ரெலோவின் தலைவரும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் விளக்கம் அளித்துள்ளார்.     

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு, செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்றிருந்த நிலையில் அதனை ஆதரித்து வாக்களித்தமை தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் மாற்றத்தினை ஏற்படுத்துவோம் என்ற கோசத்துடன் மக்களின் ஆணையைக் கோரிய ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினருக்கு அதற்கான ஆணை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வழங்கப்பட்டுள்ளது.

அவ்விதமான நிலையில் அவர்களின் ஆட்சியின் முதலாவது வரவு, செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் அவர்கள் வடக்கு, மாகாணத்துக்கு அதிகமான ஒதுக்கீடுகளைச் செய்துள்ளார்.

அதனைவிடவும், சதாரண மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் வரவு, செலவுத்திட்டத்தின் முன்மொழிவுகள் அமைந்திருக்கின்றன என்பதை கட்சி அரசியலுக்கு அப்பால் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அந்த வகையில், அவர்களின் முன்மொழிவுகள் உரிய வகையில் செயற்படுத்தப்பட்டு நடைமுறைச்சாத்தியமாக வேண்டும் என்பது எனது வலியுறுத்தலாக இருக்கின்றது. கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த அரசுகள் முன்மொழிவுகளை கவர்ச்சிகரமாக முன்வைத்தாலும் அவற்றை செயற்படுத்துவதில்லை.

ஆகவே,தான் தேசிய மக்கள் சக்தி மாற்றத்தை ஏற்படுத்துவதாக வாக்குறுதி அளித்து ஆட்சியில் அமர்ந்திருக்கின்றார்கள். அந்த மாற்றத்தினையே நாமும் எதிர்பார்க்கின்றோம். சாதாரண பொதுமக்களுக்காக அரசாங்கம் செயற்பட வேண்டும் என்பது தான் எமது எதிர்பார்ப்பாகும்.

பொருளாதாரரீதியாக வரவு,செலவுத்திட்டம் முன்னேற்றகரமாக இருந்தாலும் அவற்றை செயற்படுவதில் அரசாங்கம் அதீதமான முனைப்பினைக் காண்பிக்க வேண்டியுள்ளது.

அதேநேரம், அரசாங்கமானது, தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற நீண்டகால பிரச்சினைகளுக்கும் தீர்வினைக் காண்பிப்க வேண்டியது அவசியமாகின்றது.

என்னைப்பொறுத்தவரையில், மாற்றத்தை நோக்கி அரசாங்கம் செல்வதற்கு ஆதரவினை வழங்குவதற்கு தயாராகவே உள்ளேன். ஆனால் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களையும் தாமதமன்றி முன்னெடுக்க வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினைகான தீர்வு, பொறுப்புக்கூறல் விடயங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்காக படைகள் உட்பட தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்டவற்றுக்கு துணைபோதல் ஆகியவற்றுக்கும் தாமமன்றி தீர்மானங்களை எடுக்க வேண்டியது அவசியமாகின்றது.

அவ்வாறு அரசாங்கம் செயற்படாது விட்டால் என்னால் தற்போது காண்பிக்கப்பட்டுள்ள நல்லெண்ண சமிக்ஞையை விலக்கிக் கொள்ளவே நேரிடும் உள்ளார் என்றார்.