வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்

இன்று (19) பிற்பகல் 3 மணி முதல் 24 மணி நேரம் வரை வெப்பமான வானிலை குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தி வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட காலப்பகுதியில், நாட்டின் 6 மாகாணங்களிலும் பல பகுதிகளிலும் வெப்பநிலை, மனித உடலால் உணரப்படும் "எச்சரிக்கை" மட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் போதுமான அளவு நீரை குடிக்குமாறும், முடிந்தவரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், கடுமையான செயல்பாடுகளை மட்டுப்படுத்துமாறும், முடிந்தளவு வெள்ளை அல்லது வெளிர் நிற, இலகுரக ஆடைகளை அணியுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.