ஐனாதிபதி அனுரவை சந்திக்கவுள்ள தமிழரசுக் கட்சி!
இலங்கை தமிழரசுக் கட்சி ஜனாதிபதியை இந்த வாரம் சந்தித்து கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்கப்படும். மாகாண சபை முறைமை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி நிலைப்பாட்டை அறிந்துக் கொள்ளலாம் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, மாகாண சபை முறைமை குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற அமர்வின் போது ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து கேள்வியெழுப்பிய இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தை முன்வைக்கிறேன்.
மாகாணசபை முறைமையை இரத்துச் செய்வதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். இவ்விடயத்தில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன ? தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இவ்விடயத்தை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும். இது ஜனநாயக அவை ஆகவே அரசாங்கத்தின் நிலைப்பாட்டை குறிப்பிடுங்கள் என்றார்.
இதற்கு எழுந்து பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, சாணக்கியன் மீது மரியாதை உள்ளது. ஆகவே ஏனையோர் குறிப்பிடுவதை கேட்டு முறையற்ற சந்தேகங்களை முன்வைக்க வேண்டாம். மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா இன்றி, ஜனாதிபதியுடன் சந்திப்புக்கு ஒழுங்குப்படுத்தப்படும்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் எஸ். சிறிதரன் ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு அனுமதி கோரியுள்ளார். இந்த வாரம் சந்திப்புக்கு வாய்ப்பளிக்கப்படும். ஆகவே சாணக்கியன் இராசமாணிக்கம் ஜனாதிபதியை சந்திப்பு இவ்விடயம் தொடர்பில் உரிய நிலைப்பாட்டை அறிந்துக் கொள்வதற்கு இந்த வாரமே அனுமதி பெற்றுக் கொடுப்போம் என்றார்.