50,000 வாக்காளர் அட்டைகள் தபால் நிலையங்களில்

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தபால் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரையிலும் சில பகுதிகளுக்கு வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படாமல் உள்ளன என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி மேலும் 50,000 வாக்காளர் அட்டைகள் தபால் நிலையங்களில் உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி முதல் இந்த மாதம் 07ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வாக்காளர்களின் வீடுகளுக்கு தபால் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டன.
இந்தநிலையில் இதுவரை வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் அருகிலுள்ள தபால் திணைக்களத்துக்கு சென்று பெற்றுக்கொள்ளுமாறு பிரதி தபால் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார் பொதுத்தேர்தலுக்கு இன்னும் 04 நாள்களே உள்ளன.
இதன்படி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக எதிர்வரும் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு தினங்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் திங்கள் கிழமை 18 ஆம் திகதி மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளது.