SuperTopAds

தமிழரசு கட்சிக்கு எவரும் வாக்களித் தேவையில்லை!

ஆசிரியர் - Admin
தமிழரசு கட்சிக்கு எவரும் வாக்களித் தேவையில்லை!

தமிழரசுக் கட்சியைத் தந்தை செல்வா, அமைச்சுப் பதவிகளுக்காக உருவாக்கவில்லை. அமைச்சுப் பதவிகளுக்காக தமிழர் விடுதலை கூட்டணி உருவாகவில்லை, அமைச்சுப் பதவிகளுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தலைவர் ஆரம்பிக்கவில்லை. எனவே, அமைச்சுப் பதவிக்காகத் தமிழரசு கட்சிக்கு எவரும் வாக்களித் தேவையில்லை என முன்னாள் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

அமைச்சு பதவியையிட்டு பரிசீலிக்கலாம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2001, தொடக்கம் 2015 வரை அனைத்து பாராளுமன்றத் தேர்தல்களில் 15, 22,15 மற்றும் 16 ஆசனங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்தன. தமிழ்த் தேசியம் உறுதிப்படுத்தப்பட்டது.

ஆனால், 2015 இல் நல்லாட்சி அரசில் 16, ஆசனங்கள் கிடைத்தன. எதிர்க்கட்சி தலைவர் பதவியும் எமக்குக் கிடைத்து. அதில் இணக்கப்பாடு அரசியல், அபிவிருத்தி அரசியல் என்று வடக்கு, கிழக்கில் எட்டு நிர்வாக மாவட்டங்களிலும் அபிவிருத்தி குழு தலைவர் பதவிகள் கிடைத்தும் பாரிய அபிவிருத்திகள் வேலைவாய்ப்புகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்தும் என்ன நடந்தது?

அதன் பிரதிபலிப்பு 2020, பொதுத்தேர்தலில் 16, ஆசனங்கள் 10, ஆகக் குறைந்தது, அதற்கான மூலகாரணம் அரசுடன் சோரம் போனதால்தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.? சும்மா கிடந்த கஜேந்திரகுமார் சைக்கிள் கட்சிக்கு இரண்டு ஆசனமும், விக்கினேஸ்வரனுக்கு ஒரு ஆசனமும் 2020 இல் யாழ். மாவட்ட தமிழ்த் தேசிய கொள்கையுள்ளவர் வாக்களித்து எமது ஆதரவைக் குறைத்தனர் அல்லவா? அமைச்சுப் பதவிக்காக, சலுகை அரசியலுக்காக, பதவிக்காக எனில் தமிழரசு கட்சிக்கு எவரும் வாக்களிக்கத் தேவையில்லை என்றார்.

அனுரவின் திசைக்காட்டிக்கும், பிள்ளையானின் படகுக்கும், மோகனின் மாட்டுக்கும், டக்ளசின் வீணைக்கும், அங்கஜனின் தபால் பெட்டிக்கும், உமாசந்திர பிரகாஷின் ரெலிபோனுக்கும் இதர அரச கைக்கூலி கட்சிகளுக்கும் வாக்களிக்கலாம். அந்த கட்சிகளுக்கும் எமது தமிழரசுக் கட்சிக்கு வாக்களிப்பதற்கும் என்ன வித்தியாசம். சுமந்திரன் விரும்பியபடி கதைப்பதெல்லாம் மரக்கட்டைகளான சிலர் கேட்டுத் தலையாட்டலாம். ஆனால், மக்களுக்குத் தெரியும். தேர்தல் விஞ்ஞாபனம் இதுவரை வெளியிடவில்லை, அஞ்சல் மூல வாக்களிப்புக்கு முன்னர் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட முடியாமல் நாம் உள்ளோம் என்றார்.

சிலவேளை, சுமந்திரன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அமைச்சுப் பதவி, அபிவிருத்திகளைப் பற்றிக் குறிப்பிட்டாலும் ஆச்சரியம் இல்லை. மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சிக்கு இம்முறை கட்டாயம் மூன்று ஆசனங்கள் கிடைக்கும். சுமந்திரனின் இவ்வாறான கருத்துகளால் தான் பாதிப்பு ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.