காதலித்து விட்டு பேச மறுத்ததால் விரக்தி காதலியை குத்தி கொன்று சட்ட மாணவன் தற்கொலை

ஆசிரியர் - Editor II
காதலித்து விட்டு பேச மறுத்ததால் விரக்தி காதலியை குத்தி கொன்று சட்ட மாணவன் தற்கொலை

காதலித்து விட்டு பேச மறுத்ததால் விரக்தி காதலியை குத்தி கொன்று சட்ட மாணவன் தற்கொலை

காதலித்து விட்டு பேச மறுத்த காதலியை, கத்தியால் குத்தி கொலை செய்த சட்டக்கல்லூரி மாணவன், தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சாத்தூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையை அடுத்த இ.ரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ்(51). கூலித்தொழிலாளி. இவரது மகள் பொன் மகாலட்சுமி (19). தூத்துக்குடி மாவட்டம், வனராமுட்டியில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த முத்து மகன் மதன் (20). இவர் மதுரை அரசு சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஒரே ஊர், ஒரே தெரு என்பதால் இருவரும் அடிக்கடி சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. துவக்கத்தில் பொன் மகாலட்சுமி, மதனை விரும்பவில்லை.

ஆனாலும் தொடர் சந்திப்புகள், இருவருக்கும் இடையே காதலை மலர செய்தது. கடந்த 2 ஆண்டுகளாகவே இருவரும் காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில் ஊர்த்திருவிழா நடந்தது.

அப்போது சங்கரநத்தம் கிராமத்திலிருந்து பொன்மகாலட்சுமியின் அத்தை மகன் மற்றும் குடும்பத்தினர் திருவிழாவிற்கு வந்திருந்தனர். அப்போது படிப்பு முடிந்ததும் அத்தை மகனுக்கும், பொன்மகாலட்சுமிக்கும் திருமணம் செய்வது என்று இரு குடும்பத்தினரும் பேசி முடித்தனர். மேலும் பொன்மகாலட்சுமியிடம் குடும்பத்தினர், ‘‘அத்தை மகனைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஏதாவது இதில் தவறு நடந்தால் நாங்கள் உயிரோடு இருக்க மாட்டோம்’’ என எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே மதனுடன் பேசுவதை பொன்மகாலட்சுமி தவிர்த்து வந்தார். காதலி பேசாததால் மதன் மனமுடைந்து காணப்பட்டார்.

பலமுறை சந்திக்க வந்தும் பொன்மகாலட்சுமி அவரை தவிர்த்ததுடன், ‘வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்’ என்று கூறியதாக தெரிகிறது. இதற்கிடையே சனி, ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு மதன், பொன்மகாலட்சுமி இருவரும் இ.ரெட்டியபட்டிக்கு வந்திருந்தனர். நேற்று மதியம் தண்ணீர் எடுக்க தெருக்குழாய்க்கு பொன்மகாலட்சுமி சென்றார்.
வெயில் நேரம் என்பதால் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை. எனவே, அவரது அருகில் சென்ற மதன், ‘‘முடிவாக கேட்கிறேன். என்னை ஏற்றுக் கொள்வாயா, மாட்டாயா’’ என கோபமாக பேசி உள்ளார். ‘‘என்னை மறந்து விடு, பெற்றோர்தான் முக்கியம்’’ என்று பொன்மகாலட்சுமி மறுத்து பேசியுள்ளார்.

ஆத்திரமடைந்த மதன் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தி விட்டு தப்பினார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த பொன்மகாலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த பின், வீட்டிற்கு சென்ற மதன் கதவை பூட்டிக்கொண்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏழாயிரம்பண்ணை போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு, சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலித்து விட்டு பேச மறுத்த காதலியை கத்தியால் குத்தி கொன்று, வாலிபர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலையாளியை தேடிய கிராமத்தினர்
கடந்த 2 ஆண்டுகளாகவே பொன்மகாலட்சுமி, மதன் காதல் தொடர்ந்தபோதும், இவர்கள் கிராமத்தில் பிறருக்கு தெரிய நேரடியாக சந்தித்து பேசிக் கொண்டதில்லை. ஆனால், செல்போன், வாட்ஸ் அப், பேஸ்புக்கில் காதலை தொடர்ந்திருக்கின்றனர்.

கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பொன்மகாலட்சுமி கிடந்தபோதும், யார் கொலையாளி எனத்தெரியாமல் கிராமத்தினர் தேடி கொண்டிருந்தனர். ஆனால், தனது வீட்டில் தூக்கில் இறந்து கிடந்த மதன் ஆடையில் இருந்த ரத்தக்கறையை வைத்தே அவர்தான் கொலையாளி எனத் தெரிந்தது. கதறி அழுத தந்தை ஜெயராஜிற்கு 10 ஆண்டுகளுக்கு பிறகே பொன்மகாலட்சுமி மகளாக பிறந்துள்ளார். இதன்பிறகே பொன்ராசியா(9) என்ற 2வது மகள் பிறந்துள்ளார். எனவே, மூத்த மகள் மீது ஜெயராஜ் மிகுந்த பாசம் வைத்திருந்தார். மகளின் உடலைக் கண்டு, அவர் கதறி அழுதது வேதனையளித்தது. மேலும் தமிழக செய்திகளுக்கு முத்தமிழ் செய்திகளுடன் இணைந்திருங்கள்





காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு