SuperTopAds

கல்முனை மாநகர சபையின் மனித உரிமை மீறல்-நீதிக்கான மய்யம் நடவடிக்கை

ஆசிரியர் - Editor III
கல்முனை மாநகர சபையின் மனித உரிமை மீறல்-நீதிக்கான மய்யம் நடவடிக்கை

கல்முனை மாநகர சபையின் மனித  உரிமை மீறல்-நீதிக்கான மய்யம் நடவடிக்கை

கல்முனை மாநகர சபை பொதுமக்களுக்கு சேவை வழங்குவதில் வினைத்திறனற்றதாக காணப்படுவது கவலையளிக்கிறது என நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டமுதுமானி ஷஃபி எச். இஸ்மாயில் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபைக்கு எதிராக நீதிக்கான மய்யம் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் மேற்கொண்ட விடயம் தொடர்பிலான விசேட செய்தியாளர் சந்திப்பு அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் உள்ள அதன் அலுவலகத்தில் இன்று மாலை  நடைபெற்ற வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது ஊடக சந்திப்பில் தெரிவித்ததாவது

கல்முனை மாநகர சபைக்கு எதிராக நீதிக்கான மய்யம் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் ஒன்றினை நேற்று  மேற்கொண்டது.அதில் பிரதானமாக
குடி நீர் இணைப்புக்காக தோண்டப்படும் வீதியினை செப்பனிடும் நிதிக்கு என்ன நடந்தது என்ற விடயத்தை தெளிவுபடுத்துவதற்காக எம்மால் இவ்வழக்கு மேல் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது.இதன் மூலம் இம்மனித  உரிமை மீறல் வழக்கில்  மக்களுக்கான ஒரு நீதியை பெற்றுக்கொடுப்பதாகும்.

கல்முனை மாநகர சபை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில்  புதிய நீர் இணைப்புக்காக மாநகர சபையின் அனுமதி பெற்று தோண்டப்படுகின்ற கொங்கிரீட் உள்ளிட்ட இதர  வீதிகள் இன்னும் செப்பனிடப்படாததால் மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்குள்ளாகி வருகின்றன.இவ்விடயத்தை  எமது மய்யம் சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்குமாறு கல்முனை மாநகர சபை ஆணையாளருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றினை கடந்த காலங்களில்  அனுப்பி வைத்திருந்தது.

இதற்கு கல்முனை மாநகர சபை நிர்வாகத்தினரால் பொறுப்பற்ற வகையில்  கண்துடைப்பான பதில் எமக்கு வழங்கப்பட்டது. இதனை எமது மய்யம் ஏற்றுக்கொள்ளாததால்   மாநகர சபைக்கு எதிராக இவ்வழக்கினை தாக்கல் செய்துள்ளோம்.புதிய நீர் மின் இணைப்பினை பெறும் விண்ணப்பதாரர்கள் கல்முனை மாநகர சபைக்கு ஏற்கனவே புதிய நீர் இணைப்புக்காக தோண்டப்படும் வீதியினை செப்பனிடுவதற்கான கட்டணத்தை செலுத்திய பின்னரே நீர் இணைப்புக்காக அனுமதியை பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லைக்குள்  நீர் இணைப்பு வேலைகள் முடிவடைந்த பின்னரும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தோண்டப்பட்ட வீதிகள் மாநகர சபையினால் செப்பனிடப்படாமல் நெடுங்காலமாக காணப்படுகின்றது.

இது மாநகர சபை கட்டளை சட்டத்தினை மீறும் ஒரு செயற்பாடாகும். மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் 46 மற்றும் 47 ஆவது பிரிவின்படிஇ வீதிகளை நிர்மாணிப்பதும் பராமரிப்பதும் மாநகர சபையின் அடிப்படைப் பொறுப்பு களாகும். இந்த அடிப்படை கடமைகளை நிறைவேற்றத் தவறுவது  மாநகர சபையின் சேவைத் தன்மையை கடுமையான கேள்விக்குட்படுத்துகிறது.ஒரு குறிப்பிட்ட சேவையினை வழங்கவென நிதி அறவிடப்பட்டு பின்னர் சேவையை வழங்காதிருப்பது ஒரு நிதி மோசடியாகும். மக்களிடம் அறவிடப்பட்ட நிதிக்கு என்ன நடந்துள்ளது? என சந்தேகம் எழுகின்றது என  அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் நீதிக்கான மய்யம் மாநகர சபை ஆணையாளருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் தோண்டப்பட்ட வீதிகளை செப்பனிடும் பணியை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததோடு  மாநகர சபை நடவடிக்கை எடுக்காது போனால் மாநகர சபைக்கு எதிராக ஒரு சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று அன்றே தெரிவித்திருந்தோம்.மேலும் அரசு நிறுவனம் ஒன்றுக்கு மாகாண மேல் நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளதானது இதுவே வரலாற்றில் முதற்தடவையாகும்.

குறித்த விசேட செய்தியாளர் சந்திப்பில்  மய்யத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி றியாத் ஏ.மஜீத்  பிரதித் தலைவர் யூ.கே.எம்.றின்சான் ஆகியோரும் இணைந்திருந்தனர்.