மூன்று பிரதான வேட்பாளர்களிற்குமான ஆதரவு 30 வீதத்திற்குள்ளேயே காணப்படுகின்றது - இதுவரை தெளிவான வெற்றியாளர் இல்லை - ஆய்வாளர்கள்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களினதும் ஆதரவு தொடர்ந்தும் 30 வீதத்திலேயே காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலிற்கு இன்னமும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் பிரதான வேட்பாளர்களின் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன.
மூன்று பிரதான வேட்பாளர்களும் தாக்குதல்கள் பதில் தாக்குதல்களிலும், வாக்குறுதிகளை வழங்குவதிலும் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வாரம் மூன்று பிரதான வேட்பாளர்களினதும் வாக்குறுதிகள் உச்சக்கட்டத்தை அடைந்தன. ஒவ்வொருவரும் சம்பள உயர்வு அரசதுறையினருக்கு பல நன்மைகள் போன்ற வாக்குறுதிகளை வழங்கினார்கள்.
புதன்கிழமை தபால்மூல வாக்களிப்பு ஆரம்பமானதே இதற்கான காரணம்.தபால் மூல வாக்களிப்பு முடிவடைந்துள்ள நிலையில் ஒவ்வொரு முகாம்களை சேர்ந்தவர்களும் தங்களிற்கு அதிகவாக்குகள் பெரும்பான்மை வாக்குகள் கிடைத்திருக்கும் என தெரிவிக்கின்றனர்.
எனினும் இந்த முறை தபால்மூல வாக்குகளில் அதிகளவானவற்றை அனுரகுமார திசநாயக்கவே பெறுவார் என தெரியவந்துள்ளது.
இதேவேளை பிரதான வேட்பாளர்களின் பிரச்சார பிரிவுகளின் தலைவர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களினதும் ஆதரவு தொடர்ந்தும் 30 வீதத்திலேயே காணப்படுவதை வெளிப்படுத்தியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்கவிற்கான ஆதரவு கிராமிய மட்டத்தில் தொடர்ந்து அதிகரிப்பதையும்,
சஜித் பிரேமதாசவிற்கான ஆதரவில் மாற்றம் இல்லாததையும் ரணில் விக்கிரமசிங்கவிற்கான ஆதரவு அதிகரிப்பதையும் சமீபத்தைய மதிப்பீடுகள் வெளிப்படுத்தியுள்ளன.
மூன்று பிரதான வேட்பாளர்களில் முதல் இருவருக்குள் இடம்பிடித்தால் மாத்திரமே ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஜனாதிபதியாவதற்கான வாய்ப்புள்ளது என்பதையும்,
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு 45 வீத வாக்குகள் கிடைக்கலாம் என்பதையும் சமீபத்திய மதிப்பீடுகள் வெளிப்படுத்தியுள்ளன.
இதன் மூலம் தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் இதுவரை தெளிவான வெற்றியாளர் என எவரும் இல்லாத நிலை காணப்படுவது தெரியவந்துள்ளது.