தமிழ் பொதுவேட்பாளர் போட்டியிலிருந்து விலக வேண்டும் - சுமந்திரன்...
ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ள நிலையில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் போட்டியில் இருந்து விலக வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதன் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பா.அரியநேந்திரனை ஆதரிப்பதில்லை எனவும், அதனால் எமது கட்சி உறுப்பினராகிய அரியநேந்திரன் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.
அதேவேளை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு கொடுப்பதாக தீர்மானித்துள்ளோம்.
இதுவரை எமது கட்சி தீர்மானம் எதனையும் அறிவிக்காமையால் கட்சி உறுப்பினர்கள் பலவாறாக செயற்பட்டனர். தற்போது தீர்மானம் எடுக்கப்பட்டு சஜித் பிரேமததாசவிற்கு ஆதரவளிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்னதால் கட்சி உறுப்பினர்கள் அதற்கேற்ப செயற்படுவார்கள் என மேலும் தெரிவித்தார்.