ஜனாதிபதி தேர்தல் – வடக்கு – கிழக்கில் ரணிலின் வெற்றியை வலுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் விசேட நடவடிக்கை!
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை வலுப்படுத்தும் வகையில் வடக்கு கிழக்கில் முன்னெடக்கப்படவுள்ள பிரசாரக் கூட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்சியின் முக்கியஸ்தர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இன்று காலை சூம் செயலி ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடக்கு கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கூட்டங்களின் ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடியபின்னர் கருத்து தெரிவித்த அமைச்சர் –
மக்களிடம் நான் அடிக்கடி சொல்வதுண்டு நீங்கள் ரணிலை நம்பவோ அல்லது நம்ப முடியாதென்ற நிலைப்பாட்டிலோ சிந்திக்க வேண்டியதில்லை. என்னை நம்புங்கள். என்னிடம் தமிழ் மக்களின் அரசியல் அதிகாரத்தை தாருங்கள். நான் மக்களது அடிப்படை பிரச்சினைகள் மட்டுமல்லாது அபிவிருத்தியுடன் அரசியல் உரிமை பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வை பெற்றுத்தருவேன் என்று.
அத்துடன் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் தெரிவு செய்யப்பட வேண்டும். அதுவே தற்கால சூழலுக்கும் தமிழ் மக்களுக்கும் சரியானதெரிவாக இருக்கும்.
குறிப்பாக ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்பளிப்பதானது தமிழ் மக்கள் விரைவில் கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க வாய்ப்பளிக்கும் ஒன்றாக இருக்கும் என நினைக்கின்றேன்.
சுயநல அரசியல்வாதிகள் சிலர், தமது அரசியல் நலன்களுக்காக மக்களை தவறான திசையிலேயே வழி நடத்த முனைகின்றனர். ஆனாலும் அடுத்த அரசியல் பருவகாலத்திலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நாம் பயணிப்பதன் ஊடாகவே தமிழ் மக்களுக்கு ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும்
அந்தவகையில் சரியான திசைநோக்கி அணிதிரள்வின் ஊடாகவே எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சாத்தியமான வழிமுறையில் பயணிப்பவர்கள் பக்கம் மக்கள் அணி திரளவேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.