SuperTopAds

பலி எண்ணிக்கை 295 ஆக உயர்வு: வயநாடு விரைந்த ராகுல், பிரியங்கா காந்தி!

ஆசிரியர் - Admin
பலி எண்ணிக்கை 295 ஆக உயர்வு: வயநாடு விரைந்த ராகுல், பிரியங்கா காந்தி!

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மலைகளின் பிரதேசமான கேரளா மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கடந்த 30ம் திகதி ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி இதுவரை நிலச்சரிவில் 295 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.     

மேலும் 200க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதாகவும், அவரை பத்திரமாக மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற வருமான ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் வயநாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை (நேற்று ஆகஸ்ட் 1ம் திகதி) நேரில் பார்வையிட்டனர்.

நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட சூரல்மாலா உள்ளிட்ட பகுதிக்கு சென்ற ராகுல் காந்தி, ரெயின் கோட் அணிந்தபடி அங்கு தற்காலிகமாக ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலத்தில் நடந்து சென்று பாதிப்புகளை பார்வையிட்டார்.

மேலும், செயின்ட் ஜோசப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களை பார்வையிட்ட ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, இந்த துயரமான நேரத்தில் வயநாடு மக்களுடன் இருப்பது அவசியம் என்றும், அனைவரும் வயநாடு மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் என் தந்தையை இழந்த பிறகு என்ன துக்கம் அடைந்தேனோ, அதே துக்கத்தை தற்போதும் அடைந்ததாக ராகுல் காந்தி பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு தெரிவித்தார்.

வயநாட்டின் காட்சிகள் இதயத்தை உலுக்கிறது, இந்த கடினமான நேரத்தில் நானும் பிரியங்கா காந்தியும் வயநாட்டு மக்களுடன் நிற்போம், தேவையான அனைத்து மீட்பு நடவடிக்கைகளையும் கிடைப்பதை உன்னிப்பாக கவனித்து சரியான உதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வோம் என தெரிவித்துள்ளார்.