ராகுல் காந்தி மது போதையில் நாடாளுமன்றம் வருகிறாரா? கங்கனா ரணாவத் சர்ச்சை பேச்சு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி போதையில் நாடாளுமன்றம் வருகிறாரா என்று எம்பி கங்கனா ரணாவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் தற்போது மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசுகையில் இந்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
அதாவது அவர் பேசுகையில், "பாஜகவின் சக்கரவியூகத்தை உடைத்து எறியும் காலம் விரைவில் வரும்" என்றார். இவரின் கருத்துக்கு பாஜகவைச் சேர்ந்த எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாஜக எம்பி கங்கனா ரணாவத், ராகுல் காந்தி குறித்து சர்ச்சையாக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், "மக்களால் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பற்றி ராகுல் காந்தி பேசுவது தவறான முன் உதாரணமாகும்.
அவர், இவ்வாறு பேசுவதை பார்க்கையில் நாடாளுமன்றம் வரும் போது மது அல்லது போதை பொருளை ராகுல் காந்தி பயன்படுத்தினாரா என்று சோதனை செய்ய வேண்டும்" என்றார். இவரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.