ஜனாதிபதி ரணில் திறந்த வைத்த கிளிநொச்சி வைத்தியசாலை மூடப்பட்ட நிலையில்!
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன் சுமார் 5320 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த மே மாதம் 25ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்ட பெண் நோயியல் வைத்திய நிலையமானது தொடர்ந்து மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் முன்மொழிவுக்கு அமைய நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் நவீன வசதிகள் கொண்ட மருத்துவ உபகரணங்களுடன் கூடிய இந்த பெண்நோயியல் வைத்திய நிலையம் திறந்துவைக்கப்பட்டது.
இந்த வைத்தியசாலை கட்டட தொகுதியானது போதிய ஆளணி வளம் இன்மையால் தொடர்ந்து மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக, நவீன வசதி கொண்ட இரு சத்திர சிகிச்சை கூடங்கள் இயங்காத நிலையில் உள்ளன. அதாவது மயக்க மருந்து வைத்திய ஆளணியின்மை காரணமாகவே இயக்க முடியாதிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கதிரியக்க வைத்திய நிபுணர் இன்மையால் அவற்றின் செயற்பாடுகளும் இடம்பெறுவதில்லை.
வைத்திய சிகிச்சைப் பிரிவு திறந்து வைக்கப்பட்ட போதிலும் போதிய ஆளணி வளங்கள் நியமிக்கப்படவில்லை. இதற்கான ஆளனி வளங்களை நியமிப்பதற்கோ அல்லது ஏற்கனவே வைத்தியசாலையில் இருக்கின்ற ஆளணி வளங்களைக் கொண்டோ அதனை இயங்க வைப்பதற்கு மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வைத்திய சிகிச்சைப் பிரிவு இவ்வாறு நீண்ட காலம் மூடப்பட்டிருந்தால், ஏனைய வைத்தியசாலைகளில் இடம்பெறுவது போன்று இந்த வைத்திய சிகிச்சைப் பிரிவில் இருக்கின்ற வைத்திய உபகரணங்களை வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் கூட எதிர்காலத்தில் எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இந்த வைத்திய சிகிச்சைப் பிரிவை இயங்க வைப்பதற்கு மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.