அம்பாறை மாவட்டத்தில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு
அம்பாறை மாவட்டத்தில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு
நாட்டின் பல பகுதிகளில் கடந்த காலங்களில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இதர காரணங்களினால் நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை திடிரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அம்பாறை மாவட்டத்தில் உள்ள வாராந்த சந்தைகள் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்கள் ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விற்பனை விலை 550 முதல் 750 ரூபாய் வரையிலும் ஒரு கிலோகிராம் கறி மிளகாய் மற்றும் மிளகாய் 500 முதல் 650 ரூபாய் வரையிலும் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 350 முதல் 500 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளதுடன் ஏனைய மரக்கறி வகைகள் அதிகளவில் உயர்ந்த நிலையில் உள்ளதாக பாவனையாளர் கூறுகின்றனர்.
அத்துடன் ஒரு கிலோகிராம் கரட் 460 ரூபாவிற்கும் ஒரு கிலோ கிராம் வெண்டைக்காய் 500 ரூபாவிற்கும் இஞ்சி ஒரு கிலோ 3500 ரூபாவிற்கும் தேசிக்காய் ஒரு கிலோ 1800 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன்படி கடந்த நாட்களில் 100 ரூபாவிற்கு குறைவாக விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகள் இன்று 500 ரூபாவைக் கடந்துள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளதால் மரக்கறிகளின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இதன் காரணமாகவே நாடளாவிய ரீதியில் இவ்வாறு மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.மேலும் சீரற்ற காலநிலை காரணமாக தற்போது மரக்கறிகள் நுகர்வோரின் தேவைக்கு ஏற்ற வகையில் வரத்து இல்லாததால் காய்கறி விலை மேலும் உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதை விட தம்புள்ளை மற்றும் நுவரெலியாவில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும் மரக்கறிகளின் விலை போக்குவரத்து செலவு உள்ளிட்ட இதர செலவினாலும் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த விலை சுமையினை நுகர்வோர் சுமக்க வேண்டியிருப்பதாக வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இவ்வாறு மரக்கறிகளின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளமைக்கு சில மாபியாக்களும் இடைத்தரகர்களும் காரணம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளதுடன் இது தவிர மற்றுமொரு காரணம் சந்தையில் வெளிப்படைத்தன்மை இல்லாமை மற்றும் பல பிரச்சினைகள் காரணமாகவே மரக்கறிகளின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளன
எனவே சந்தையில் சில வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்தால் மாத்திரமே மரக்கறி விலைகளை குறைக்க முடியும்.அத்துடன் லீக்ஸ் மற்றும் தக்காளி உள்ளிட்ட ஏனைய மரக்கறிகளின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.மேலும் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு காரணமாக நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்து வருகின்றனர்.உள்ளூர் சந்தையில் மரக்கறிகளின் திடீர் விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை இவ்விடயத்தை ஆராய்ந்து விலையை கட்டுப்படுத்த உடனடி தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் சில வியாபாரிகள் பழுதடைந்த மரக்கறிகளை குறைந்த விலைகளில் விற்பனை செய்வதுடன் சிலர் புதிய மரக்கறி வகைகள் என அவற்றை கூறி அதிக விலைக்கு நுகர்வோருக்கு விற்பனை செய்கின்றனர்.
எனவே இந்த மாஃபியாவை முறியடிக்க நடவடிக்கை எடுப்பதுடன் பொருத்தமற்ற முறையில் விலையை அதிகரிக்கும் வியாபாரிகளுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.