நாச்சிக்குடா பாடசாலை பெயர் தொடர்பான சர்ச்சைக்கு முடிவு! மாகாண கல்விப் பணிப்பாளர் உறுதி..
கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் பெயரில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அதே பெயரையே உத்தியோகபூர்வமாகப் பயன்படுத்துமாறு வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
“நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என்ற பெயர் 4 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் திருத்துமாறு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தப் பெயர் மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தால் அறிக்கையும் கோரப்பட்டுள்ளது. இதேவேளை, 'கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை' என்ற பெயரே உத்தியோகபூர்வமானது” என மாகாண கல்விப் பணிப்பாளர் குயின்ரஸ் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
பாடசாலையின் தற்போதைய அதிபர், நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற இறப்பர் முத்திரையைப்பயன்படுத்தி க.பொ.த. சாதாரண தர பரீட்சை மாணவர்களின் அனுமதி அட்டைக்கு கையொப்பம் இட்டுள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.