கல்முனை வடக்கு செயலகம் என்ற ஒன்றை அரசு வர்த்தமானி மூலம் உருவாக்கவில்லை-புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
கல்முனை வடக்கு செயலகம் என்ற ஒன்றை அரசு வர்த்தமானி மூலம் உருவாக்கவில்லை-புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி அனைத்து சிவில் சமூகம் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று மீண்டும் கல்முனையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதானது மீண்டும் தேர்தலை மையப்படுத்தி தமிழ் மக்களை ஏமாற்றும் செயலாகும் என "புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்" தெரிவித்துள்ளது.
இது பற்றி அக்கட்சியின் தேசிய தலைவர் முஸம்மில் அபூசாலி தெரிவித்ததாவது
கல்முனையில் வடக்கு பிரதேச செயலகம் ஒன்றை அரசு உருவாக்கவில்லை. மாறாக கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் உப செயலகம் ஒன்றே உருவாக்கப்பட்டது. இந்த உப செயலகத்தை தமிழ் செயலகம் என தமிழ் இனவாத அரசியல்வாதிகள் அழைத்து தமிழ் மக்களை ஏமாற்றினர். பிரதேச செயலகங்கள் இன ரீதியில் அமைய முடியாது என அரசாங்கம் சொன்னதை தொடர்ந்து கல்முனை வடக்கு செயலகம் என அழைக்கத் தொடங்கினர்.
கல்முனை வடக்கு செயலகம் என்ற ஒன்றையும் அரசு வர்த்தமாணி மூலம் உருவாக்கவில்லை என்று தெரிந்தும் தேர்தல் நன்மைக்காக அப்பாவி தமிழ் சிவில் மக்களை இனவாத தமிழ் அரசியல்வாதிகள் உசுப்பேற்றி விட்டுள்ளனர்.
ஆகவே இப்பிரச்சினைக்கு தீர்வாக மேற்படி உப செயலகத்தை அரசாங்கம் ரத்து செய்து, தமிழ் மக்கள் 99 வீதம் வாழும் பாண்டிருப்புக்கு, பாண்டிருப்பு பிரதேச செயலகம் ஒன்றை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என "புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்" அரசையும் தமிழ், முஸ்லிம் எம்பிமாரையும் கேட்டுக்கொள்கிறது.