சம்மாந்துறை வைத்தியசாலையின் புதிய கட்டடத்தினை விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்க நடவடிக்கை

ஆசிரியர் - Editor III
சம்மாந்துறை வைத்தியசாலையின் புதிய கட்டடத்தினை விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்க நடவடிக்கை

சம்மாந்துறை வைத்தியசாலையின் புதிய கட்டடத்தினை விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்க நடவடிக்கை

சம்மாந்துறை வைத்தியசாலையின் புதிய கட்டடத்தினை விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமினால் சம்மாந்துறை வைத்தியசாலையின் புதிய கட்டடத்தினை விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிப்பது தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய சனிக்கிழமை(23) மாலை சம்மாந்துறை வைத்தியசாலைக்கு  பாராளுமன்ற உறுப்பினருடன் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட  அதிகாரிகள் விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டனர்.

இதன் போது குறித்த வைத்தியசாலையின் புதிய கட்டட நிர்மாணங்களை பார்வையிட்ட சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பி.ஜி  மஹிபால தலைமையிலான அதிகாரிகள்  பாராட்டியதுடன் வைத்தியசாலையின்  இரண்டாம் கட்டமாக பல  மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்து  நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அவ்விடத்தில் உறுதியளித்தார். 

மேற்குறித்த களவிஜயத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸதீன், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எச்.எம்  ஆசாத் ஹனீபா, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் திட்டமிடல் வைத்தியர் ஏ.ஆர் . நியாஸ் அஹமட் ,பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின்   திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர்  எம். சீ. எம். மாஹிர், உள்ளிட்ட பிரிவு தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் அடுத்தகட்ட பணிகள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலைகளில் அத்தியட்சகர்களையும் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.

அத்துடன் சுகாதார இராஜாங்க அமைச்சராக பதவிவகித்த காலத்தில்   பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின்  அயராத முயற்சியின் மூலம் நிந்தவூர் மகப்பேற்று வைத்தியசாலை மற்றும் சம்மாந்துறை  பொத்துவில்  ஏறாவூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு தேவையாக கருதப்பட்ட கட்டடங்கள் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

பின்னர் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள் காரணமாக நிர்மாணப்பணிகள் தாமதமடைந்ததை தொடர்ந்து, அவற்றை நிறைவு செய்வதற்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பல்வேறு முயற்சிகளை எடுத்துவந்த நிலையில், சம்மாந்துறை வைத்தியசாலையின் புதிய கட்டடத்தினை விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

குறித்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி செயலகம் குறித்த விடயத்தினை சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள் நிந்தவூர் மகப்பேற்று வைத்தியசாலை நிர்மாணப்பகுதிக்கும்,  சம்மாந்துறை, பொத்துவில் மற்றும் ஏறாவூர் வைத்தியசாலைகளுக்கும்  கள விஜயம் மேற்கொள்ள உள்ளதோடு, விரைவான தீர்வுகள் பற்றி குறித்த குழுவினருடன்  பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்கள் கலந்துரையாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு