17ஆவது ஐபிஎல் அத்தியாயத்தை வெற்றியுடன் ஆரம்பித்தது சென்னை...
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் 6 விக்கெட்களால் தனது வெற்றி நடையை ஆரம்பித்தது.
இண்டியன் பிறீமியர் லீக் 17ஆவது அத்தியாயம் சென்னையில் கோலாகல தொடக்க விழாவுடன் ஆரம்பமானது.அ தனைத் தொடர்ந்து கணிசமான மொத்த ஓட்டங்கள் பெறப்பட்ட போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 174 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ்
18.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்று 6 பந்துகள் மீதிமருக்க வெற்றியீட்டியது.இந்த வெற்றிக்கு அடிகோலியவர் 4 விக்கெட் குவியலைப் பதிவுசெய்த பங்களாதேஷ் வேகப்பந்துவீச்சாளர் முஷ்தாபிஸுர் ரஹ்மான் ஆவார்.
அத்துடன் சென்னை சுப்பர் கிங்ஸின் திறமையான களத்தடுப்பும் இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியிருந்தது.ஆரம்பம் முதல் அதிரடியில் இறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் சார்பாக புதிய அணித் தலைவர் ருத்துராஜ் கய்க்வாட், ரச்சின் ரவிந்த்ரா ஆகிய இருவரும் 24 பந்துகளில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
கய்க்வாட் 15 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் 7ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் மொத்த எண்ணிக்கை 71 ஓட்டங்களாக இருந்தபோது ரவிந்த்ரா 37 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.தொடர்ந்து அஜின்கியா ரஹானே 27 ஓட்டங்களுடனும் டெரில் மிச்செல் 22 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.
(110 - 4)அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஷிவம் டுபே, ரவிதந்த்ர ஜடேஜா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்கல் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து சென்னையின் வெற்றியை உறுதிசெய்தனர்.ஷிவம் டுபே 34 ஓட்டங்களுடனும் ரவிந்த்ர ஜடேஜா 25 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் கெமரன் க்றீன் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது.அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ் (35), விராத் கோஹ்லி (21) ஆகிய இருவரும் 27 பந்துகளில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து ஸ்திரமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஆனால், பவ் டு ப்ளெசிஸ், ராஜாத் பட்டிடார் (0), அதிரடி நாயகன் க்ளென் மெக்ஸ்வெல் (0) ஆகிய மூவரும் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தது றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.அவர்களைத் தொடர்ந்து கோஹ்லி, கெமரன் க்றீன் (18) ஆகிய இருவரும் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 6 விக்கெட்களை இழந்து 78 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.ஆனால், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 95 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணியின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர்.
அனுஜ் ராவத் 25 பந்துகளில் 48 ஓட்டங்களுடனும் தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 36 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.பந்துவீச்சில் முஸ்தாபிஸுர் ரஹ்மான் 4 ஓவர்களில் 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டநாயகன்: முஸ்தாபிஸுர் ரஹ்மான்