SuperTopAds

தலைவர் பதவிக்கான போட்டி, பேச்சுவார்த்தைகளில் இணக்கமில்லை! 21ம் திகதி தேர்தலாம்...

ஆசிரியர் - Editor I
தலைவர் பதவிக்கான போட்டி, பேச்சுவார்த்தைகளில் இணக்கமில்லை! 21ம் திகதி தேர்தலாம்...

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன், யோகேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவுக்கு வந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த மூவரும் பேச்சுவார்த்தை தொடர்பான இறுதி முடிவினை கட்சியின் பதில் பொதுச்செயலாளர் வைத்தியர். ப.சத்தியலிங்கத்துக்கு அறிவித்துள்ள நிலையில், கட்சியின் புதிய தலைமைக்கான தேர்தல் திட்டமிட்டபடி எதிர்வரம் 21ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைத் தெரிவு இணக்கப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென அரசியல்குழு உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக தலைமை வேட்பாளர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் தமக்கிடையில் கலந்துரையாடி இறுதி தீர்மானத்தினை அறிவிப்பதற்கு ஒருநாள் கால அவகாசத்தினை வழங்குமாறு கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்ற அரசியல் குழு கூட்டத்தில் தெரிவித்திருந்தனர்.

அந்தவகையில், மாதிவெலவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விடுதில் உள்ள சிறீதரனின் தங்குமிடத்தில் நேற்று முற்பகல் 10.45 மணிக்கு மூன்று பேருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆரம்பமானது.

கலந்துரையாடலின் ஆரம்பத்திலேயே சுமந்திரன், தான் தலைமைப்பதவிக்கு போட்டியிடுவதை விரும்புவதாக தெரிவித்தார். இச்சமயத்தில், சிறீதரன் கடந்த காலத்தில் தன்னுடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் உரையாடிய விடயங்களை நினைவுபடுத்தினார்.

எனினும், பின்னரான காலத்தில் சிறீதரன் தலைமைக்கு போட்டியிடவில்லை என்று அறிவித்ததன் காரணத்தினாலேயே தான் தலைமைக்கு போட்டியிடும் தீர்மானத்தினை எடுத்து களமிறங்கியதாகவும் அதற்கான பணிகளை முன்னெடுத்ததாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

அச்சமயத்தில், குறுக்கீடு செய்த சிறீதரன், மாவை.சோ.சேனாதிராஜா மீண்டும் தலைமைப்பதவியை தொடர்வதற்கு விரும்பினால் மட்டுமே தான் போட்டியிடவில்லை என்பதே தனது நிலைப்பாடு என்பதை குறிப்பிட்டார்.

இந்நிலையில், மூன்றாவது தலைமை வேட்பாளரான சீனித்தம்பி யோகேஸ்வரன் எவ்விதமான கருத்துக்களையும் வெளியிட்டிருக்கவில்லை.

இதனையடுத்து தேர்தல் மூலம் புதிய தலைமையை பொதுக்குழு அங்கத்தவர்களே தெரிவு செய்யவதற்கு இடமளிப்போம் என்ற நிலைப்பாட்டுடன் வெறுமனே 20நிமிடங்களில் குறித்த கலந்துரையாடல் நிறைவுக்கு வந்திருந்தது.

தொடர்ந்து மாதிவெலவில் இருந்து வெளியேறிய சுமந்திரன் கட்சியின் பதில் பொதுச்செயலாளரான வைத்தியர்.ப.சத்தியலிங்கத்துக்கு கலந்துரையாடப்பட்ட விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட வில்லை என்பதையும் எதிர்வரும் 21ஆம் திகதி தலைமைக்கான தேர்தலை நடத்துவதை உத்தியோக பூர்வமாக அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அதேபோன்றே, சிவஞானம், சிறீதரனும், சீனித்தம்பி யோகேஸ்வரனும் கூட பதில் பொதுச்செயலாளரிடத்தில் தேர்தல் மூலம் புதிய தலைமை தெரிவு செய்யப்படுவதை இறுதியானது என்று குறிப்பிட்டனர்.

இந்நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி புதிய தலைமைக்காக பொதுச்சபை உறுப்பினர்கள் பங்கேற்கும் இரகசிய வாக்கெடுப்பு திருகோணமலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.