பாம்புக்கு பாடை கட்டி அடக்கம் செய்த விவசாயி
இந்தியாவின் தமிழகத்தில் உயிரிழந்த பாம்புக்கு பாடை கட்டி தாரை தப்பட்டையுடன் மயானத்தில் அடக்கம் செய்த நபரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு - தஞ்சாவூரின் ஒரத்தநாடு அருகே திருநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன், இவருக்கு 4 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது.
எலி தொல்லை அதிகம் இருந்ததால் விளைச்சல் பாதிப்படைந்தது, இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் 6 அடி நீள சாரைப்பாம்பு ஒன்றை பார்த்துள்ளார் கண்ணன்.
பாம்பை கொல்லாமல் அப்படியே விட்டு விட்டார், பாம்பும் வயலில் இருந்த எலிகளை பிடித்து தின்றுள்ளது.
இதனால் பாதிப்புகள் குறைந்த நல்ல விளைச்சலும் கிடைத்தது, விவசாயிகளின் தோழன் என்பதற்கிணங்க பாம்பு கண்ணனுக்கு உதவியாக இருந்துள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கண்ணன் வயலுக்கு வந்த போது, பாம்பு இறந்து கிடந்துள்ளது, இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கண்ணன், தனக்கு உதவியாய் இருந்த பாம்பை நல்ல முறையில் அடக்கம் செய்ய முடிவெடுத்தார்.
இதன்படி பாம்புக்கு மனிதர்களை போன்று பாடை கட்டி தாரை தப்பட்டையுடன் மயானத்தில் அடக்கம் செய்தார்.இச்செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.