SuperTopAds

அகில இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்டம்!! -வரலாற்று சாதனை படைத்தது சென்.பற்றிக்ஸ் கல்லூரி-

ஆசிரியர் - Editor II
அகில இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்டம்!! -வரலாற்று சாதனை படைத்தது சென்.பற்றிக்ஸ் கல்லூரி-

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும், கொழும்பு ஷாகிராக் கல்லூரிக்கும் இடையிலான இறுதியாட்டம் கடந்த 09 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் சென். ஜோண்ஸ் கல்லூரி மைதானத்தில்  நடைபெற்றது.

இவ் இறுதியாட்டத்தில் தேசிய ரீதியில் காற்பந்தாட்டத்தில் பலம் வாய்ந்த கொழும்பு ஷாகிராக் கல்லூரியை  சமநிலை தவிர்ப்பு உதை மூலம் 04 : 03 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று அகில இலங்கை 20 வயதுப் பிரிவில் சம்பியனானது. 

2022, 2023 ஆம் ஆண்டுகளில்

அடுத்தடுத்து இரண்டு தடவைகள் 20 வயதுப் பிரிவில் காற்பந்தாட்டத்தில் சம்பியனான ஒரே பாடசாலை சென் பற்றிக்ஸ் கல்லூரி என்பது குறிப்பிடத் தக்கது.

இவ் அணி தனது முதலாவது போட்டியில் அனுராதபுரம் நச்சடுவா முஸ்லீம் மகா  வித்தியாலயத்தை 07:00 என்ற கோல் கணக்கிலும், இரண்டாவது போட்டியில் கடயமுட்டை முஸ்லீம் மத்திய கல்லூரியை 03 : 01 என்ற கோல் கணக்கிலும் காலிறுதியாட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் பலம் பொருந்திய மட்டக்களப்பு ஏறாவூர் அலிஹார் தேசிய பாடசாலையை 02 : 00 என்ற கோல் அடிப்படையிலும் அரையிறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை 01 : 00 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில்   கொழும்பு ஷாகிராக் கல்லூரியை சமநிலை தவிர்ப்பு ( Penalty)  உதைமூலம் வெற்றி பெற்றமை குறிப்பிடத் தக்கது.

இவ் வயதுப் பிரிவினர் 2018 ஆம் ஆண்டில் 16 வயதுப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் பாடசாலைகள் காற்பந்தாட்டத்தில் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்த அணி என்பது குறிப்பித்தக்கது.