குற்றம்சாட்டப்பட்ட படை அதிகாரிகள் தனித்துச் செயற்படக் கூடாது! - ஜனாதிபதி உத்தரவு.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் குறித்து குற்றம் சுமத்தப்பட்ட பாதுகாப்பு பிரதானிகள் மற்றும் அதிகாரிகள் தனித்து செயல்படக்கூடாது என்ற உத்தரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு சபை கூட்டத்தில் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாதுகாப்பு சபை கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமைஇடம்பெற்றது. பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க உட்பட பாதுகாப்பு பிரதானிகள் கலந்துகொண்டிருந்தனர். நாட்டின் தேசிய பாதுகாப்பு உட்பட ஏனைய பாதுகாப்புத்துறை சார்ந்த விடயங்கள் குறித்து பரந்துபட்ட கலந்துரையாடல்களும் மீளாய்வுகளும் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து 2019ஆம் ஆண்டில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்து பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தின் விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
சனல் 4 வெளிப்படுத்தல்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாதுகாப்பு துறை சார்ந்த பிரதானி மற்றும் அதிகாரிகள் தனித்து செயற்படக் கூடாது. இவ்வாறு செயற்படும் பட்சத்தில் அநாவசியமான நெருக்கடிகளும் தேசிய பாதுகாப்பு குறித்த சிக்கல்களுமே ஏற்படும். எனவே குற்றச்சாட்டுக்கு உட்பட அதிகாரிகள் தனித்து செயற்படக் கூடாது என்று இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான செனல் 4இன் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக விசேட குழு நியமிக்க கடந்த வார பாதுகாப்பு சபை கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைவாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் தலைமையில் ஓய்வுபெற்ற விமானப் படைத் தளபதி ஜயலத் வீரக்கொடி, ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ ஏ.ஜே.சோஸா ஆகியோரை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.