SuperTopAds

இந்தியப் பயணம் - கஜேந்திரகுமார் மறுப்பு!

ஆசிரியர் - Admin
இந்தியப் பயணம் - கஜேந்திரகுமார் மறுப்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தலைவர்கள் ஒன்றிணைந்த சந்திப்பொன்றை நேரடியாக மேற்கொள்வது தொடர்பில் இதுவரையில் இணக்கப்பாடு ஏற்படவில்லை.     

தமிழர்களின் இனப் பிரச்சினை உட்பட ஏனைய விடயங்கள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திப்பதற்கு தமிழ்த் தலைவர்கள் ஒருங்கிணைத்து பயணமொன்றை மேற்கொள்வதற்கும் ஒன்றிணைந்து சந்திப்பொன்றை நடத்துவதற்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் கடந்த வாரம் எழுத்துமூலமான கடிதத்தினை ஏனைய கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

குறித்த கடிதத்தினை இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கே மின்னஞ்சல் ஊடாக விக்னேஸ்வரன் அனுப்பி வைத்திருந்தார்.

இவ்வாறான நிலையில், குறித்த கடிதம் தொடர்பில் அத்தமிழ் தலைவர்கள் எடுத்துள்ள நிலைப்பாடுகள் தொடர்பில் தனித்தனியாக வினவியபோதே, அவர்களிடத்தில் இதுவரையில் இணக்கப்பாடுகள் எட்டப்படாத நிலைமைகள் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் இதுகுறித்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட பல்வேறு விதமான விடயங்கள் சம்பந்தமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து எடுத்துரைப்பதற்கான கோரிக்கை நான் ஏனைய தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பியிருந்தேன்.

தற்போது வரையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனிடத்தில் இருந்து மட்டும் தான் பதிலளிக்கப்பட்டுள்ளது. ஏனைய எவரும் உத்தியோகபூர்வமாக எனக்கு பதிலளிக்கவில்லை. அவர்களின் பதில்கள் விரைவில் கிடைக்கும் என்ற அடிப்படையில் காத்திருக்கின்றேன்.

அதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகளாக பிரதமர் மோடியிடத்தில் நேர ஒதுக்கீட்டை கோருதல் உள்ளிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார்.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் இனப்பிரச்சினை விடயம் அண்மைக்காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, வடக்கு,கிழக்கில் பல்வேறு ஆக்கிரமிப்பு பிரச்சினைகள் நீடிக்கின்றன. ஆகவே அந்த விடயங்கள் சம்பந்தமாக நாம் ஏற்கனவே பிரதமர் மோடியின் கவனத்திற்கு எழுத்துமூலமாகக் கொண்டு வந்திருந்தாலும், நேரில் சந்திப்பதன் ஊடாக அவற்றின் மீது உடன் கரிசனை கொள்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும்.

எவ்வாறாயினும், பிரதமர் மோடியை நேரடியாகச் சந்திப்பது தொடர்பில் அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து செல்வது பற்றிய கூடிப் பேசித் தீர்மானிக்க வேண்டியுள்ளது. கட்சி ரீதியிலும், அதேபோன்று சந்திப்பில் பங்கேற்கத் தயாராக இருக்கின்ற தலைவர்கள் மட்டத்திலும் அக்கலந்துரையாடல் அவசியமாகின்றது என்றார்.

புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் உள்ளிட்ட கூட்டணியான ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பது தொடர்பில் நீண்டகாலமாக எமது விருப்புக்களை வெளிப்படுத்த உள்ளதோடு அதற்கான தொடர்ச்சியான கூட்டுச் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.

கடந்த ஆண்டும், இந்த ஆண்டின் ஆரம்பத்திலும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு நாம் ஏனைய தலைவர்களையும் ஒன்றிணைத்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் உட்பட நீண்டகால இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் வலியுறுத்தி எழுத்துமூலமான கடிதமொன்றை அனுப்பியிருந்தோம்.

அந்த வகையில், இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை இலங்கை அரசாங்கம் தாமதமின்றி முழுமையாக அமுலாக்கி மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும்.

அதன்பின்னர் அதிகரங்களை சமஷ்டி அடிப்படையில் பகிர்ந்தளித்து, நிரந்தமானதொரு தீர்வினை வழங்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது. இந்த நிலைப்பாட்டுடன் இணங்குபவர்களுடன் கலந்தாராய்ந்து ஏகோபித்த நிலைப்பாட்டுடன் டெல்லிக்குச் செல்வதுதன் பொருத்தமானது. அதுதான் வெற்றிகரமான விஜயமாகவும் அமையும். அவ்விதமான விஜயமொன்றை செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க நாம் தயாராகவே உள்ளோம் என்றார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகையில்,

இந்தியாவுக்கு செல்வதற்கோ பிரதமர் மோடியை சந்திப்பதற்கோ இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கோ நாம் எதிரானவர்கள் அல்லர். ஆனால், எமது கட்சியின் நீண்டகால நிலைப்பாட்டின் பிரகாரமும் கொள்கை அடிப்படையிலும் ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்தம் பற்றிய எந்தவொரு உரையாடல்களிலும் நாம் பங்கேற்கப்போவதில்லை. அந்த அடிப்படையில் 13ஐ வலியுறுத்தும் வகையிலான ஒன்றிணைந்த பயணத்தில் எம்மால் பங்கேற்க முடியாது என்றார்.