ஆசியக்கோப்பையில் புதிய உலக சாதனை!! -கெத்தாக அடுத்த சுற்றுக்கு நுழைந்த இலங்கை-
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேறியது.
லாகூரில் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த ஆசியக்கோப்பை போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணி 291 ஓட்டங்கள் குவித்தது.
குசால் மெண்டிஸ் 84 பந்துகளில் 92 ஓட்டங்கள் விளாசினார். பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 37.4 பந்துப் பரிமாற்றங்களில் 289 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் ஆனது.
மொஹம்மது நபி 65 (32) ஓட்டங்களும், ஷஹிடி 59 (66) ஓட்டங்களும் எடுத்தனர். இலங்கை அணியின் தரப்பில் கசுன் ரஜிதா 4 இலக்குகளையும், துனித் வெல்லாலகே மற்றும் தனஞ்செய டி சில்வா தலா 2 இலக்குகளையும் கைப்பற்றினர்.
ஆப்கான் அணி சகல இலக்குகளையும் ஆனதால், இலங்கை அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோல்வியால் ஆப்கானிஸ்தான் அணி தொடரை விட்டு வெளியேறியது.
குசால் மெண்டிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இலங்கை அணி தொடர்ச்சியாக 12 ஆவது ஒருநாள் போட்டியில் எதிரணியின் சகல இலக்குகளையும் இழக்க செய்து உலக சாதனை படைத்துள்ளது.
இலங்கைக்கு அடுத்த இடத்தில் அவுஸ்திரேலியா (10), தென் ஆப்பிரிக்கா (10), பாகிஸ்தான் (9) அணிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.