2011 உலக கிண்ணப் போட்டியில் இலங்கை தோற்கவில்லை!! -காட்டிக்கொடுக்கப்பட்டது என சர்ச்சையை எழுப்பிய மஹிந்தானந்த-
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோற்கவில்லை காட்டிக் கொடுக்கப்பட்டது.
இது தொடர்பில் அப்போதிருந்த தேர்வுக் குழுவின் உயர் அதிகாரியொருவரின் 2013 ஆம் ஆண்டின் சொத்து விபரங்களை ஆராய்ந்தால் அதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடந்த கிரிக்கெட் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது:-
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணி தோல்வியடையவில்லை. காட்டிக் கொடுக்கப்பட்டது. என்ற நிலைப்பாட்டிலேயே நான் இப்போதும் இருக்கின்றேன். இதற்கு தேவையான சாட்சிகள் உள்ளன. 2011 காலப்பகுதியில் தேர்வுக் குழுவில் இருந்த உயர் அதிகாரியின் 2013 சொத்து விபரங்களை ஆராய்ந்தால் அது வெளிப்படும்.
இதேவேளை போட்டி காட்டிக்கொடுப்புகள் இப்போதும் இடம்பெறுகின்றன. கடந்த காலங்களில் காலியில் நடந்த சம்பவங்கள் அதை எடுத்துக்காட்டுகின்றன. இதன்படி விளையாட்டுத்துறையில் பெரும் ஊழல் மோசடிகள் உள்ளன. அது தற்போதைய எல்.பி.எல் வரையில் வந்துள்ளன.
எமது ஆட்சியில் கிரிக்கெட் சுயாதீனமாக செயற்பட்டது. கிரிக்கெட் விளையாட்டை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கொண்டு சென்றோம். கிரிக்கெட் விளையாட்டில் காணப்படும் ஒருசில குறைப்பாடுகளுக்கு தீர்வு காண அரசியல் கொள்கை அடிப்படையில் தீர்வு காண முயற்சித்தாலும், ஒருசிலர் அதற்கு தடையாக செயற்படுகிறார்கள். ஆகவே கிரிக்கெட் விளையாட்டின் தற்போதைய நிலை குறித்து அனைவரும் விசேட கவனம் செலுத்தி கொள்கை ரீதியில் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.