பொலிஸார்/ கடவுச்சீட்டு அலுவலக அதிகாரிகள் முன்னிலையில் புலம்பெயர் தமிழர் மீது மாபியா கும்பல் தாக்குதல்..
வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் வைத்து உத்தியோகத்தர்கள், பொலிஸார் முன்னிலையில் கடவுச்சீட்டு பெற வந்த மட்டக்களப்பைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் மீது மாபியா கும்பலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.
கடவுச்சீட்டு புதுப்பிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வருகைதந்த நபர் ஒருவர் மீதே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கடவுச்சீட்டை புதுப்பிக்க விண்ணப்பித்த குறித்த நபர் தனது கடவுச்சீட்டு ஏன் இன்னும் வரவில்லை என உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டுள்ளார்.
இதன்போது, குறித்த அலுவலகத்தில் நின்ற பொலிஸாரை தள்ளி கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் கடவுச்சீட்டு உத்தியோகத்தர்கள் முன்னிலையில் குறித்த நபரை தாக்கி கை கட்டப்பட்டு நிலத்தில் விழுந்துள்ளார்.
தகாத வார்த்தைகளை பேசி குறித்த இளைஞனை தாக்கியுள்ளனர். அத்துடன், பொலிஸாருக்கு சார்பாக குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்கள்
கடவுச்சீட்டு அலுவலகம் முன்பாக இடம் பிடித்து கொடுத்தும், கடவுச்சீட்டை முன்னிலைப்படுத்தி பெற்றுக் கொடுக்கும் மாபியா கும்பலை சேர்ந்தவர் என அறிய முடிகிறது.
இதேவேளை, அரச கடமைக்கு இடையூறு விளைவித்ததாக குறித்த நபரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி தற்போது விளக்கமறியலில் உள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவத்தின் மூலம் கடவுச்சீட்டு அலுவலகம் முன் செயற்படும் மாபியாக்களுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் உடந்தையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.