வவுனியா - தோணிக்கல் வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்களை தடுத்துவைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி..

ஆசிரியர் - Editor I
வவுனியா - தோணிக்கல் வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்களை தடுத்துவைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி..

வவுனியா - தோணிக்கல் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் கடந்த 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புகுந்த குழுவொன்று வீட்டு உரிமையாளர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதுடன், பெற்றோலை ஊற்றி வீட்டுக்கு தீயிட்டனர்.

இச்சம்பவத்தில் மூச்சுதிணறல் காரணமாக வீட்டில் இருந்த பாத்திமா சமீமா என்ற 21 வயது இளம்குடும்ப பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன்,மேலும் 10 பேர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அதில் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த இறந்த பெண்ணின் கணவனான ச.சுகந்தன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இராசாயன பகுப்பாய்வாளர்கள், தடவியல் நிபுணர்களின் உதவியுடன் வவுனியா பிரிவுபொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துவந்ததுடன். இச் சம்பவம் தொடர்பில் பலரிடம் வாக்கு மூலங்களும் பெறப்பட்டிருந்தன.

விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை வவுனியா பிரிவிற்கான குற்றத்தடுப்பு பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை குற்றச்செயலுக்கு உதவியதாக தெரிவிக்கப்படும் 3 மோட்டார் சைக்கிள்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வவுனியாவை சேர்ந்த ஏனைய மூவர் வெளிநாடுகளிற்கு தப்பிச்செல்ல முடியாதவாறு அவர்களது கடவுச்சீட்டுக்கள் பொலிசாரால் முடக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இருதரப்பிற்கிடையிலான தனிப்பட்ட முன்பகையே குறித்த சம்பவத்திற்கு காரணம் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்ற அனுமதியுடன் குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு