SuperTopAds

மணிவிழாவுக்கு நிதிசேகரிப்பு! முறைகேடாக நடந்த ஆசிரியர்களை பாதுகாக்கும் வலயக் கல்வி பணிப்பாளர்...

ஆசிரியர் - Editor I
மணிவிழாவுக்கு நிதிசேகரிப்பு! முறைகேடாக நடந்த ஆசிரியர்களை பாதுகாக்கும் வலயக் கல்வி பணிப்பாளர்...

முல்லைத்தீவு வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில்  அதிபரின் மணிவிழாவினைக் கொண்டாடுவதற்காக சில ஆசிரியர்கள் தமது சொந்த வங்கிக் கணக்கில்  சுமார் 4 இலட்சம் ரூபா வரை நிதி சேகரித்து செலவு செய்தமை ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் உள்ள முல்லைத்தீவு வலய கல்வி பணிப்பாளருக்கு அனுப்பப்பட்ட தகவல் அறியும் சட்டமூலத்தின் கீழான கேள்விக்கு, மணிவிழாவுக்கான மணிவிழா குழு நியமிக்கப்படவில்லை எனவும் ஆசிரியர்களால் இணைந்து அதை செய்ததாகவும் பதில் வழங்கப்பட்டுள்ளது. 

ஒரு தகவல் அறியும் சட்டமூலம்(NP/MU/ Zonal/RTI/Appeal/06) கேட்கப்பட்ட கேள்விக்கு மண்விழா குழு நியமிக்கப்படவில்லை எனவும் ஆசிரியர்கள் தாமாகவே மணிவிழாவை முன்வந்து கொண்டாடியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பத்திரிகை விளம்பரங்களிலும் செய்திகளிலும் மணி விழா அழைப்பிதழிலும் மணிவிழா குழு தலைவர் என ஒருவருடைய பெயர் குறிப்பிடப்பட்டது.பின்னரான தகவல் அறியும் சட்டமூலத்தின் கீழான கேள்விக்கு  (Np/Mu/Zonal/RTI/16) மணிவிழா குழு நியமிக்கப்பட்டதாக முரண்பாடான பதிலை வழங்கியுள்ளார். 

மேலும் தகவல் அறியும் சட்டம் (NP/MU/ Zonal/RTI/Appeal/06) ஊடான மற்றொரு கேள்விக்கு வங்கி கணக்கின் ஊடாக நிதி சேகரிக்கப்படவில்லை. என வலயக்கல்வி பணிப்பாளர் பதில் வழங்கியுள்ளார். 

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் படி ஆசிரியர்கள் நேரடியாகவோ தமது சொந்த வங்கி கணக்கின் ஊடாகவோ நிதி சேகரிக்க முடியாது.இந்நிலையில் ஆசிரியர்கள் நேரடியாகவும் மற்றும் தமது தனிப்பட்ட வங்கி கணக்கின் ஊடாகவும் நிதி சேகரித்துள்ளமைக்கு வலயக் கல்வி பணிப்பாளரால் எவ் விதமான விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை. 

பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் கடந்த 14.11.2022 அன்று மணிவிழா தொடர்பான தெளிவு கோருதல் என்று எழுதிய கடிதத்திற்கு இன்று வரை பாடசாலையால் பதில் வழங்கப்படவில்லை. 

அதேபோல் வலய கல்வி பணிப்பாளரும் பதில் வழங்கவில்லை. தகவல் அறியும் சட்டத்தில் Np/Mu/Zonal/RTI/16 கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலுக்கு பழைய மாணவர் சங்க செயலாளர் (முன்னைய) தமது தகவல் கடிதத்திற்கு ஏன் பதில் வழங்கப்படவில்லை என  வலயக் கல்வி அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

மேலும் மணிவிழா முடிந்த பின்னர் மணிவிழா தொடர்பான தெளிவு கோரலை பழைய மாணவர்கள் கேட்டதை இட்டு பழைய மாணவர்களின் நிதியை திருப்பி தருவதாக ஆசிரியர் சங்க தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியோர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். 

மணிவிழாவின் பின்னரும் 50 ஆயிரம் ரூபாய் நிதி ஆசிரியர் சங்கத்திடம் எவ்வாறு வந்தது? இவ்வாறான முறைகேட்டை செய்த ஆசிரியர்களுக்கு எதிராக முல்லைத்தீவு வலயக்கல்வி பணிப்பாளர் தகுந்த நடவடிக்கை எடுக்காமை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

ஆகவே வடமாகாண பாடசாலைகளில் பல்வேறு நிர்வாக முறைகள் தொடர்ச்சியாக இடம் பெற்றுவரும் நிலையில் விசாரணை குழு அமைப்பதும் அதன் பின்னர் நடவடிக்கைகள் இன்று கிடப்பில் கிடப்பதும் தொடர்கதையாகவே உள்ளது.