13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ரணிலுக்கு தார்மீக உரிமை இல்லை!
13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலேயே தற்போதைய ஜனாதிபதி அதிகாரத்தில் உள்ளார் என தெரிவித்துள்ள சாகர காரியவசம் முன்னாள் ஜனாதிபதிகள் எவரும் நடைமுறைப்படுத்தாத 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தார்மீக உரிமை ரணில் விக்கிரமசிங்கவிற்கு கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
பலவந்தமாக 13வது திருத்தத்தை அறிமுகப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர் ஜெயவர்த்தன நாடாளுமன்றத்தில் அதற்கு ஆதரவளித்த ரணசிங்க பிரேமதாச டிபி விஜயதுங்க அதிகாரங்களை பரவலாக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் ஆட்சிக்கு வந்த சந்திரிகா குமாரதுங்க மகிந்த ராஜபக்ச,தமிழ் முஸ்லீம் கட்சிகளின் வலுவான ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன ஆகியோர் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவில்லை என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
புலனாய்வு தகவல்கள் போன்றவற்றின் மூலம் அவர்கள் அதனை நடைமுறைப்படுத்தாமல் விட்டமைக்கான கடுமையான காரணங்கள் இருக்கவேண்டும்,என தெரிவித்துள்ள பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் ஆகவே ரணில் விக்கிரமசிங்க இந்த காரணங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும், அந்த காரணங்கள் இன்னமும் நீடிக்கின்றனவா என்பதை கண்டறிவதற்காக புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகளை பெறவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக கோட்டாபய ராஜபக்சவிற்கு மக்கள் வழங்கிய அதிகாரத்தையே தற்போது ரணில் விக்கிரமசிங்க அனுபவிக்கின்றார். அதிகாரப்பரவலுக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக நாடு ஸ்திரமற்ற நிலையில் காணப்பட்டவேளை அதிகாரப்பரவலுக்காக மக்கள் எங்களிடம் அதிகாரத்தை வழங்கவில்லை கோட்டாபய ராஜபக்ச தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதாக உத்தரவாதம் அளித்தார் 6.9 மில்லியன் மக்கள் அவருக்காக வாக்களித்தனர் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினர் ஆகவே எவரும் மக்களின் எதிர்பார்ப்பிற்கு எதிராக செயற்பட முடியாது இதன் காரணமாகவே நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அதற்கான தார்மீக அதிகாரமில்லை என தெரிவிக்கின்றோம் எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய அவசியமிருந்தால் அவர் தேர்தலை நடத்தலாம் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போகின்றேன் என மக்களிடம் தெரிவிக்கலாம் மக்கள் அதனை ஏற்றுக்கொண்டால் அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை பதவிக்கு கொண்டு வருவார்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாங்கள் இதனை தெரிவித்து விட்டோம் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.