SuperTopAds

காணி/ பொலிஸ் அதிகாரமற்ற 13ம் திருத்தச் சட்டத்தை திணிக்க அரசு முயற்சி! இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இரா.சம்மந்தன்...

ஆசிரியர் - Editor I
காணி/ பொலிஸ் அதிகாரமற்ற 13ம் திருத்தச் சட்டத்தை திணிக்க அரசு முயற்சி! இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இரா.சம்மந்தன்...

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் இலங்கை  இந்தியாவிற்கு வழங்கிய  உறுதிமொழிகளை நிறைவேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்துமாறு பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு  தமிழ் மக்கள் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எழுதிய கடிதம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம்  நேற்று (17) கையளிக்கப்பட்டது.

அதிகாரப் பகிர்வு , வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் நிர்வாகம் தொடர்பில்  இந்தியாவிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதியிடம் அவரது இந்திய விஜயத்தின்போது  வலியுறுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த சில தசாப்தங்களாக இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளையும் பொறுப்புகூறலையும் நிறைவேற்றுவதற்கு தவறியுள்ளதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் கூடிய அதிகாரப் பகிர்வை நிராகரித்து, 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தாதிருப்பதற்கு இலங்கை முயற்சிப்பதாக கடிதத்தில் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தமிழ் மக்களது பாதுகாப்பு, தனித்துவம் மற்றும் இருப்பு என்பன இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அப்பாற்பட்ட விடயம் அல்லவெனவும் இரா.சம்பந்தன் பாரத பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மை சமூகமாக தமிழ் மக்கள் வாழ்ந்துவரும் நிலையில், அவர்களுக்கு சமஷ்டியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், தமிழ் கட்சிகள்  பாரத  பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களை அனுப்பி வைத்துள்ளன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதுவரிடம் தமது கோரிக்​கைகள் அடங்கிய கடிதத்தினை கடந்த 10 ஆம் திகதி கையளித்திருந்தது.

இதேவேளை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து மற்றுமொரு கடிதத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கையளிக்கும் நோக்கில், கடந்த 13 ஆம் திகதி இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் ஒப்படைத்தனர்.