முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளை சர்வதேச நியமங்களுக்கு அமைய மேற்கொள்ள திட்டம்...

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளை சர்வதேச நியமங்களுக்கு அமைய மேற்கொள்ள திட்டம்...

முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் பகுதியில் 29.06,2023 அன்று  விடுதலைப் புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற சீருடைகளுடன்  கண்டுபிடிக்கப்பட்ட  மனித எச்சங்கள் தொடர்பிலான  அகழ்வு பணிகள் கடந்த வியாழக்கிழமை (6) இடம்பெற்ற நிலையில்  பல எழும்புக்கூடுகள் அடையாளம் மீட்க்கப்பட்டன.

முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் அன்றைய தினம் ஆரம்பமான அகழ்வு பணியின்போது முன்னதாக அடையாளம் காணப்பட்ட எழும்புக்கூடுகளுக்கு அருகில் காணப்பட்ட பகுதிகள் தோண்டப்பட்ட நிலையில், 

மேலும் பல எழும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அது பாரிய மனித புதைகுழியாக இருக்கலாம் .என்ற அடிப்படையில் குறித்த அகழ்வு பணி தொடர்பில் நேற்று(13) வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் அனைத்து திணைக்களங்கள் 

மற்றும் சட்டத்தரணிகளுடன் இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் புதைகுழி தொடர்பான மேலதிக அகழ்வுகள் தொடர்பில் தீர்மானிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது .

இதற்கமைய முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் பற்றிய விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (13) முல்லைத்தீவு நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

காலை 10 மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்ற கட்டடத்தொகுதியில் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின்  சட்ட  வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவா, 

யாழ்ப்பாணம் வைத்தியசாலையின்  சட்ட  வைத்திய நிபுணர் செல்லையா பிரணவன், கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள், காணாமல் போனோர் அலுவலகத்தின் (ஓ எம் பி ) சிரேஸ்ர சட்டத்தரணி ஜெகநாதன் தர்ப்பரன், 

பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணிமான எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன், வி.எஸ்.எஸ்.தனஞ்சயன், ருஜிக்கா நித்தியானந்தராஜா உள்ளிட்ட சட்டத்தரணிகள் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின்   சட்டத்தரணிகளான றணித்தா ஞானராஜா,வி.கே நிறஞ்சன்,

தமிழ்  தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், அளம்பில் பங்குத்தந்தை யூட் அமலதாஸ், நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையாக மக்கள் பேரியக்கத்தின் இணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகள், 

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன், முல்லைத்தீவு மாவட்ட  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்   சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி, மற்றும்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்

கலந்துரையாடலில் முன்னதாக நீதிபதி அவர்களால் சட்ட வைத்திய அதிகாரியிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின்  சட்ட  வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவா, யாழ்ப்பாணம் வைத்தியசாலையின்  சட்ட  வைத்திய நிபுணர் செல்லையா பிரணவன்,

யாழ்ப்பாணம் வைத்தியசாலையின்  சட்ட  வைத்திய நிபுணர் உருத்திரபசுபதி மயூரதன் ஆகிய மூவர் கொண்ட குழாம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின்  சட்ட  வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவா தலைமையில் குறித்த பணியை முன்னெடுக்கும் எனவும் 

இதில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க தொல்லியல் திணைக்களத்தினரை உள்வாங்க வேண்டும் எனவும்  அவர்களே அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்  குறித்த பகுதியில் மழைக்காலத்துக்கு முன்னதாக அகழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் 

குறித்த அகழ்வுப்பணிக்கான நிதி ஏற்ப்பாடுகள் செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார் தொடர்ந்து சுமார் இரண்டு மணித்தியாலங்களாக பல்வேறு தரப்புக்களின் கருத்துக்களை  தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை (20.07.2023) அன்று  சர்வதேச நியமங்களுக்கு அமைவான சட்டவைத்திய அதிகாரிகளின் அகழ்வு நடவடிக்கைகள், 

நிதி தொடர்பான விடயம் ஓ எம் பி அலுவலகம் ஊடாக நிதியை பெற்றுக்கொள்ளல், விரைவாக அகழ்வு பணிகளை மேற்கொள்ளவேண்டும், சான்றுப்பொருட்களை பாதுகாக்கும் பொறிமுறை குறித்த காணி தொடர்பில் நில அளவை திணைக்களத்தின் வரைபடங்கள், 

தொல்லியல் திணைக்களத்தின் அகழ்வு பணிதொடர்பான விடயங்கள், கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளரால் குறித்த காணி சுதந்திரத்தின் பின்னர் யார் யாரின் ஆளுகையில்  இருந்தது என்பது தொடர்பான விடயம்  தற்போதுள்ள பாதுகாப்பை அதிகரித்தல் உள்ளிட்ட   விடயங்கள் தொடர்பில் தொடர்பில் மன்றுக்கு  அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அன்றைய தினம்(20) அகழ்வு பணி தொடர்பில் தீர்மானிப்பதாக தெரிவிக்கப்பட்டது 

இது தொடர்பாக  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி. கே .நிறஞ்சன்,

சர்வதேச நியமங்களை பின்பற்றியும் வைத்தியர்களுக்காக தயாரிக்கப்பட்ட கோவையின் அடிப்படையிலும் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று இடம்பெற்ற மனித புதைகுழி தொடர்பான விசேட கலந்துரையாடலில் சட்ட வைத்திய அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

இதன்போது, அழைக்கப்பட்ட நிறுவன பிரதிநிதிகளும் வைத்தியர்களாக வைத்தியர் வாசுதேவ மற்றும் பிரணவன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தார்கள்.

அவர்கள் இந்தப் புதைகுழி அகழ்வு எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஒட்டுமொத்த நபர்களின் கலந்துரையாடலின் அடிப்படையில், 

சர்வதேச நியமங்களை பின்பற்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கருத்துரைக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே வைத்தியர்களுக்கு அவர்களுடைய தயாரிக்கப்பட்ட கோவை ஒன்று காணப்படுவதாக கூறி அதற்கு அமைவாக இந்த அகழ்வை மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டிருக்கிறது

அதே நேரம் எவ்வாறு இந்த மனித புதைகுழி அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என நீதிமன்றத்தால் பல கட்டளைகள், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. 

காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள், அரசியல்வாதிகள் மற்றும் பல நிறுவனங்களைச் சார்ந்தோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தார்கள்.

இந்த நிறுவனங்களின் அறிக்கைகளுக்காக தொல்பொருள் திணைக்களத்தின் அறிக்கைக்காகவும் இந்த வழக்கு அடுத்த வியாழக்கிழமை மீண்டும் அழைக்கப்பட இருக்கிறது என தெரிவித்தார் .

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு