உலக கிண்ண சுப்பர் 6 சுற்று!! -தலா 4 புள்ளிகளுடன் இலங்கை, ஸிம்பாப்வே-

ஆசிரியர் - Editor II
உலக கிண்ண சுப்பர் 6 சுற்று!! -தலா 4 புள்ளிகளுடன் இலங்கை, ஸிம்பாப்வே-

இந்தியாவில் நடைபெறவுள்ள 13 ஆவது உலகக் கிண்ண அத்தியாயத்தில் விளையாடவுள்ள இறுதி  2 அணிகளைத் தீர்மானிக்கும் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றின் சுப்பர் 6 சுற்று இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

வரவேற்பு நாடான ஸிம்பாப்வே, 1975, 1979 ஆகிய முதலிரண்டு உலகக் கிண்ண அத்தியாயங்களில் சம்பியனான மேற்கிந்தியத் தீவுகள், நெதர்லாந்து ஆகியன ஏ குழுவிலிருந்தும், 1996 உலக சம்பியன் இலங்கை, ஸ்கொட்லாந்து, ஓமான் ஆகியன பி குழுவிலிருந்தும் சுப்பர் 6 சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ளன.

இந்த அணிகளுக்கு இடையில் அந்தந்த குழுக்களில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றியீட்டிய அணிகள் அந்த வெற்றிப் புள்ளிகளுடனேயே சுப்பர் 6 சுற்றை ஆரம்பிக்கவுள்ளன. இதற்கு அமைய சுப்பர் 6 சுற்றில் தலா 4 புள்ளிகளுடன் இலங்கையும் ஸிம்பாப்வேயும் விளையாடவுள்ளன.

நெதர்லாந்தும் ஸ்கொட்லாந்தும் தலா 2 புள்ளிகளுடன் அடுத்த சுற்றை எதிர்கொள்ளும். ஆனால், மேற்கிந்தியத் தீவுகளும் ஓமானம் வெறுங்கையுடன் சுப்பர் 6 சுற்றை ஆரம்பிக்கவுள்ளன.

ஏ குழுவிலிருந்து தகுதிபெற்ற அணிகள் பி குழுவிலிருந்து தகுதிபெற்ற அணிகளை சுப்பர் சுற்றில் எதிர்த்தாடும். சுப்பர் 6 சுற்றில் 9 போட்டிகள் நடைபெறுவதுடன் அந்த சுற்று முடிவில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

இதற்கு அமைய ஸிம்பாப்வேயும் இலங்கையும் உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுவதற்கு அனுகூலமான அணிகளாக தென்படுகின்றன. இந்த இரண்டு அணிகளும் சுப்பர் 6 சுற்றில் தலா 2 போட்டிகளில் வெற்றிபெற்றால் தலா 8 புள்ளிகளுடன் உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுவதை உறுதிசெய்துகொள்ளும்.

சுப்பர் 6 சுற்றில் ஸ்கொட்லாந்தையும் ஓமானையும் ஸிம்பாப்வே இலகுவாக வெற்றிகொள்ளும் எனவும் நெதர்லாந்தை இலங்கை இலகுவாக வெற்றிகொள்ளும் எனவும் நம்பப்படுகின்றது. இருப்பினும், ஸிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளிடம் இலங்கை பலத்த சவாலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.  அல்லது இலங்கையிடம் ஸிம்பாப்வேயும் மேற்கிந்தியத் தீவுகளும் பலத்த சவாலை  எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

சுப்பர் 6 சுற்றில் நெதர்லாந்தை நாளை வெற்றிக்கிழமையும், ஸிம்பாப்வேயை ஜூலை 2 ஆம் திகதியும் மேற்கிந்தியத் தீவுகளை ஜூலை 7 ஆம் திகதியும் இலங்கை எதிர்த்தாடும்.

இதேவேளை, சுப்பர் 6 சுற்றுக்கு தகுதிபெறத் தவறிய நேபாளம், ஐக்கிய அமெரிக்கா, அயர்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய 4 அணிகள் நிரல்படுத்தல் சுற்றில் விளையாடவுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு