2009ல் இந்தியா நடந்துகொண்ட விதத்தை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை - அண்ணாமலை...
2009ல் ஈழ தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஒருபோதும் மறக்கமாட்டேன் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
2009 இல் இந்தியா நடந்துகொண்டவிதத்தை நானும் தமிழ்நாட்டின் தமிழர்களும் ஒருபோதும் மன்னிக்கமாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர்,
இந்தியா தலையிட்டு யுத்தத்தை தடுத்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
2009 மே மாதம் பத்தாம் திகதி குஜராத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இலங்கையில் எனது சகோதர சகோதரிகள் படுகொலை செய்யப்படும்போது
இந்திய அரசாங்கம் என்ன செய்கின்றது என நரேந்திரமோடி பகிரங்கமாக கேள்வி எழுப்பினார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்களிற்கு இந்திய பிரதமர் அரசியல் தீர்வொன்றை வழங்குவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2014 இல் பாஜக அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் அணுகுமுறை மாற்றமடைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் தமிழ்நாட்டிற்கும் பலாலிக்கும் இடையிலான நேரடி விமானசேவை,
காரைக்கால் - காங்கேசன்துறை இடையிலான படகு சேவை மற்றும் மன்னார் தமிழ்நாட்டிற்கு இடையிலான படகுசேவை திட்டம் போன்றவற்றினால் மக்கள் மத்தியிலான தொடர்பு அதிகரிக்கப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு சென்ற மலையக மக்களை சந்தித்த முதல் இந்திய பிரதமர் நரேந்திரமோடி என்பதையும் அண்ணாமலை நினைவூட்டியுள்ளார்.
1987ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்கள் மலையக்தமிழர்கள் பெருந்துன்பங்களை அனுபவித்துள்ளனர் இருசமூகத்தினரையும் சர்வதேச சக்திகள் தங்கள் சதுரங்கவிளையாட்டிற்காக பயன்படுத்தியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.