SuperTopAds

நாட்டின் பிரதமர் பெயர்கூட தெரியாதா? -திருமணத்தை நிறுத்தி; மணமகனின் தம்பியை கரம் பிடித்த மணப்பெண்-

ஆசிரியர் - Editor II
நாட்டின் பிரதமர் பெயர்கூட தெரியாதா? -திருமணத்தை நிறுத்தி; மணமகனின் தம்பியை கரம் பிடித்த மணப்பெண்-

இந்தியா - லக்னோ, உத்தர பிரதேசத்தின் காஜிபுர் மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான சிவசங்கருக்கும், பசந்த் பட்டி கிராமத்தை சேர்ந்த ரஞ்சனா என்பவருக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கடந்த 11 ஆம் திகதி மணமகன் குடும்பத்தினர் ரஞ்சனா வீட்டுக்கு சென்றனர். திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடைபெற்று கொண்டு இருந்தன. அப்போது மணமகள் குடும்பத்தினர் மணமகன் சிவசங்கரிடம் இயல்பாக பேசிக் கொண்டிருந்தனர். 

திடீரென மணமகள் ரஞ்சனாவின் தங்கை, மணமகனிடம் நமது நாட்டின் பிரதமர் யார் என்று கேட்டார், பதில் தெரியாமல் மணமகன் சிவசங்கர் விழித்தார்.

பிரதமர் மோடியின் பெயர் சகலர் மத்தியிலும் பிரபலமாகவுள்ள நிலையில் அவரது பெயர்கூட மணமகனுக்கு தெரியவில்லையே என்று மணமகள் குடும்பத்தினர் குழப்பம் அடைந்தனர். 

இந்த தகவல் மணமகள் ரஞ்சனாவின் காதுக்கும் எட்டியது. அதிர்ச்சி அடைந்த அவர், பிரதமரின் பெயர்கூட தெரியாத நபரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறினார்.

அதன்பின் கிராமத்து தலைவர்கள் முன்னிலையில் இருவீட்டாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மணமகனின் தம்பி ஆனந்துக்கும் ரஞ்சனாவுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. 

எனினும் ஆனந்தின் படிப்பறிவை சோதிக்க விரும்பிய மணமகள் வீட்டார், அவரிடம் சில பொது அறிவு கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர் தெளிவான பதில்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து ஆனந்துக்கும் ரஞ்சனாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் மணமகனின் தந்தை ராம் அவதார் கூறும்போது:-

துப்பாக்கி காட்டி அச்சுறுத்தி எனது இளைய மகன் ஆனந்துக்கும் ரஞ்சனாவுக்கும் திருமணம் செய்து வைத்தனர். எனது மகன் ஆனந்த் திருமண வயதை எட்டவில்லை. அதற்கு முன்பே அவருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்துவிட்டனர். இது குறித்து பொலிஸாரிடம் முறயிட்டுள்ளேன் என்றார்.

இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கும் போது:-

இது விநோதமான வழக்கு. இதுதொடர்பாக இரு குடும்பத்தினரையும் அழைத்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையின் அடிப்படையில் பிரச்சினைக்கு சட்டப்பூர்வமாக தீர்வு காணப்படும் என்றார்.