வனவள திணைக்களம் - பொலிஸார் இணைந்து இளம் குடும்பஸ்த்தரை கட்டிவைத்து அடித்து சித்திரவதை! நேரில் சந்தித்து பேசிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
ஒட்டிசுட்டான் - கிழவன்குளம் பகுதியில் கடந்த புதன்கிழமை (14) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு அடித்து துன்புறுத்தப்பட்ட நவரத்தினம் நவரூபன் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், நேற்று (17) மாலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி காண்டீபன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவரது குடும்பத்தினரை சந்தித்துப் பேசியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிழவன்குளத்தில் வசிக்கும் நவரத்தினம் நவரூபன் என்பவரது வீட்டுக்கு கடந்த 14ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் 4 விசேட அதிரடிப் படையினரின் துணையுடன் சென்ற 7 வனஜீவராசிகள் திணைக்களத்தினர், நவரூபனை கைதுசெய்துள்ளனர்.
அதன் பின்னர், கைதான நவரூபனை அழைத்துச் சென்று, கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளனர்.
அத்தோடு, அவர் மீது பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, நீதிமன்றத்தில் முற்படுத்தி, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கவும் பொலிஸார் முயன்றுள்ளனர்.
எனினும், நவரூபன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், பொலிஸாரின் மோசமான சித்திரவதைகளால் படுகாயமடைந்த நவரூபன் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, நவரூபனின் குடும்பத்தினரை நேற்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி நேரில் சென்று சந்தித்து நவரூபனின் நிலைமை குறித்து கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்துள்ளனர்.