வெளிநாட்டு முதலீட்டை வரவேற்கிறேன் ஆனால் அதன் ஊடாக எமது மக்களுக்கு கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன?

ஆசிரியர் - Editor I
வெளிநாட்டு முதலீட்டை வரவேற்கிறேன் ஆனால் அதன் ஊடாக எமது மக்களுக்கு கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன?

பூநகரி - கௌதாரி முனையில் அமையவுள்ள அதானி நிறுவனத்தின் காற்றாலையை எதிர்க்கவில்லை. ஆனால் அத்திட்டத்தின் ஊடாக  பெறவுள்ள மக்கள் நலத்திட்டங்களை சபையில் முன்வைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் வேண்டுகோள் முன்வைத்தார்.

நேற்றைய தினம்  செவ்வாய்க்கிழமை  கிளிநாச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கௌதாரி முனை காற்றாலை விவகாரம் தொடர்பாக  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கௌதாரி முனைப்பகுதியில் அதானி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள காற்றாலை திட்டமானது வெளிநாட்டு முதலீடுகளை வரவழைக்கும்  திட்டம்.

அதனை நாம் வரவேற்கிறோம். ஆனால் குறித்த திட்டத்தை மேற்கொள்ளும்போது அப்பகுதி மக்களுக்கு அவ்வாறான நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்பதை திட்டம் ஆரம்பிக்க முன்னர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்பட வேண்டும்.

வெறுமனே கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி, இளைஞர் தொழில் பயிற்சி மற்றும் வாழ்வாதார திட்டங்கள் வழங்கப்படவுள்ளதாக கூறுவது பொருத்தமானதாக அமையாது.

ஏனெனில் கடந்த காலங்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதலீட்டாளர்கள் அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்தும்போது மக்களுக்கான நல்லத் திட்டங்கள் உரிய முறையில் சென்றடையவில்லை.

தற்போதும் கௌதாரி முனையில் காற்றாலை அமைக்கும்போது அப் பிரதேசம் சார்ந்து கல்வித்துறைக்கு  எவ்வாறான திட்டங்களை எந்தெந்த பாடசாலைகளில் மேற்கொள்ளப் போகிறோம்.

சுகாதாரத்துறை சார்ந்து என்ன திட்டங்கள் செய்யப் போகிறோம் வீதி அபிவிருத்தி தொடர்பில் எந்தெந்த வீதிகளை எவ்வளவு கிலோமீட்டர் வரை புனரமைக்கப் போகிறோம் என்பது தொடர்பில் தெளிவில்லை.

ஆகவே  அபிவிருத்தி திட்டங்களை அனுமதிப்பதற்கு முன்னர் அவர்களிடமிருந்து எமது மக்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற நலத்திட்டங்கள் தொடர்பில் சரியான இறுதி அறிக்கை ஒன்றை குறித்த நிறுவனம் ஊடாக பெற்று அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவுக்கு  சமர்ப்பிக்குமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு