உருத்திரபுரம் சிவன் கோவில் அளவீட்டு பணிகளை நிறுத்த அமைச்சர் உறுதி!!

ஆசிரியர் - Editor I
உருத்திரபுரம் சிவன் கோவில் அளவீட்டு பணிகளை நிறுத்த அமைச்சர் உறுதி!!

கிளிநொச்சி - உருத்திரபுரம் சிவன்கோவில் மீது தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ள அளவீட்டுப் பணிகளை இடைநிறுத்துவதாக தொல்லியல் துறை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு உறுதியளித்துள்ளர். 

இன்றைய தினம் (25) வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுக்கும் இடையில், பத்தரமுல்லயில் அமைந்துள்ள அமைச்சின் தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, 

உருத்திரபுரம் சிவன் கோவில், வெடுக்குநாறிமலை, குருந்தூர் மலை, குச்சவெளி விகாரைகள், தையிட்டி விகாரை, ஆனையிறவிலும், கிளிநொச்சி நகரிலும் புதிய விகாரை அமைப்பதற்கான முன்னெடுப்புகள், பரந்தன் சந்தி புத்தர் சிலை, கிளிநொச்சி மகாவித்தியாலயத்துக்கு அண்மையில் விகாரை அமைத்தல் 

மற்றும் பூநகரி விகாரை உள்ளிட்ட விடயங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவந்ததோடு, தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புகள் தொடர்பில் தன்னால் தயாரிக்கப்பட்ட அறிக்கையையும் அமைச்சரிடம் கையளித்திருந்தார். 

இதன்போது, புனித பூமிகளுக்குரிய காணிகளை பொதுமக்கள் கையகப்படுத்த முனைவதாலேயே அவ்விடங்களை தாம் அளவீடு செய்வதாக தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டதை உடனடியாகவே மறுத்துரைத்த சிறீதரன் எம்.பி, 

எங்கள் மக்கள் அத்தகைய செயல்களில் ஒருபோதும் ஈடுபடவில்லை எனவும், பொய்யுரைகளைப் பரப்பி மதப்பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடாது எமது மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று மிகக் காட்டமாக தெரிவித்திருந்தார். 

நீண்ட நேர விவாதத்தின் பின்னர், உருத்திரபுரம் சிவாலயத்தில் தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ள அளவீட்டுப் பணிகளை இடைநிறுத்துவதற்கு, தொடர்புடைய திணைக்களங்களுக்கு உத்தரவு பிறப்பிப்பதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் உறுதியளித்ததோடு, 

குருந்தூர் மலை மற்றும் வெடுக்குநாறி மலை விவகாரங்கள் தொடர்பில் அவற்றின் வழக்குத் தீர்ப்புகளின் பின்னர் விசேட கலந்துரையாடலை ஒழுங்குசெய்து தீர்மானங்களை மேற்கொள்வதாகவும், 

தையிட்டி விகாரை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டதே அன்றி, அதற்கும் தொல்லியல் திணைகளத்திற்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

குறிந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், கோவிந்தன் கருணாகரம், தவராசா கலையரசன் மற்றும் குலசிங்கம் திலீபன் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு