போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு ஒரு வழிப்பாதையாக மாற்றப்படவுள்ள வீதி
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு ஒரு வழிப்பாதையாக மாற்றப்படவுள்ள வீதி
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மஹ்மூத் மகளிர் கல்லூரி மற்றும் ஸாஹிரா கல்லூரி மாணவ மாணவிகள் ஆசிரியர்களின் போக்குவரத்து சிரமங்களை தவிர்ப்பதற்காக வீதி அபிவிருத்தி திணைக்களம் ஒரு வழிப்பாதை பெயர்ப் பலகையினை பொருத்தியுள்ளது .
கடந்த காலங்களில் பாடசாலைக்கு செல்லும் மற்றும் பாடசாலையை விட்டு வீடு செல்லும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் என பலரும் சிரமங்களை எதிர்கொண்டு இருந்தனர்.
இந்த போக்குவரத்தை சீர்செய்வதற்கு அண்மைக்காலமாக கலந்துரையாடல்கள் பல்வேறு மட்டங்களில் இடம்பெற்று வந்துள்ளதுடன் கடந்த புதன்கிழமை (3) ஸாஹிரா கல்லூரி வீதியினை ஒரு வழிப்பாதை மாற்றுவதற்கான பெயர்ப் பலகையினை கல்முனை வீதி அபிவிருத்தி திணைக்களம் நிர்மாணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் பிரகாரம் குறித்த பெயர்ப்பலகையில் பாடசாலை ஆரம்பிக்கும் நேரங்களில் காலை 7.00 மணி முதல் காலை 8.00 மணி வரை மற்றும் பாடசாலை விடும் நேரங்களில் மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை வெள்ளிக்கிழமை பாடசாலை விடும் நேரமான காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை உள்ள நேரங்களில் பிரதான வீதியிலிருந்து ஸாஹிரா கல்லூரி வீதிக்கு எந்தவித வாகனங்களும் உட்செல்ல முடியாதவாறு ஒரு வழிப்பாதையாக மாற்றப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் (வேன் இகார்) முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட மோட்டார் சைக்கிள்கள் பாடசாலையை விட்டு இரு மருங்கிலும் 50 மீட்டர் தொலைவில் வாகனச் சாரதிகள் மாணவர்களை இறக்கி விடுதல் தொடர்பான பெயர்ப் பலகையும் அங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் நீண்ட காலமாக குறித்த வீதியில் போக்குவரத்து சிரமத்தை எதிர்கொண்ட பாடசாலை சமூகத்தினரினதும் பெற்றோர்களினதும் அசெளகரியங்கள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த செயற்திட்டத்தை கண்காணித்து இப்புதிய போக்குவரத்து நடைமுறையில் அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொண்ட கல்முனை மாநகர சபை கல்முனை வீதி அபிவிருத்தி திணைக்களம் கல்முனை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய அதிகாரிகள் அனைவருக்கும் பாடசாலை சமூகத்தினர் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
இது தவிர குறித்த பாடசாலைகள் ஆரம்பிக்கும் மற்றும் பாடசாலை விடும் நேரங்களில் வாகன சாரதிகள் பிரதான வீதியிலிருந்து ஸாஹிரா கல்லூரி வீதிக்கு உட்செல்வதை தவிர்த்து மாற்று வீதிகளை பயன்படுத்தி ஒத்துழைப்புக்களை வழங்க எதிர்காலத்தில் கல்முனை மாநகர சபை சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.