பாரிய மரமொன்று கல்முனையில் சரிந்தது-போக்குவரத்தை சீர்செய்த பொலிஸார்
பாரிய மரமொன்று வேரோடு சாய்ந்ததில் போக்குவரத்து சிரமங்களை பொதுமக்கள் எதிர் நோக்கியதை அவதானிக்க முடிந்தது.
இன்று(21) மதியம் கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியின் வர்த்தக நிலையம் ஒன்றின் முன்னால் இருந்த பாரிய மரமொன்று வேரோடு சாய்ந்ததில் தொலைத்தொடர்பு வயர்கள் துண்டிக்கப்பட்டதுடன் பொது போக்குவரத்தும் தடைப்பட்டது.
சுமார் 6 வருடங்கள் பழைமை வாய்நத காயா எனப்படும் மரம் ஒன்றே இவ்வாறு பிரதான வீதியில் சரிந்துள்ளதுடன் போக்குவரத்தில் ஈடுபட்ட எவருக்கும் காயமேற்படவில்லை என கல்முனை பொலிஸார் குறிப்பிட்டனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் விழுந்த மரத்தை துண்டாக்கி அகற்றி வருகின்றனர்.இச்செயற்பாட்டிற்கு உதவியாக கல்முனை மாநகர தீயணைப்பு பிரிவினரும் இயந்திர வாள் உதவியுடன் குறித்த மரத்தை துண்டித்து பொதுப்போக்குவரத்தை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதே வேளை குறித்த மரம் சாய்ந்தமையினால் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி கல்முனை போக்குவரத்து பொலிஸாரினால் இரு வழி பாதையாக தற்காலிகமாக மாற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது.
குறித்த போக்குவரத்து சீரமைக்கும் செயற்பாட்டை கல்முனை தலைமையக போக்குவரத்து பொறுப்பதிகாரி நிஹால் சிறிவர்த்தன முன்னெடுத்து வருகின்றார்.