சுற்றுலா சென்ற நான்கு இளைஞர்கள் மாயம்-தேடுதல் நடவடிக்கை முன்னெடுப்பு
சுற்றுலா சென்று நீராடச் சென்ற நான்கு இளைஞர்கள் இன்று (21) காணாமல் போயுள்ளனர்.
மொனராகலை மாவட்டம் வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் அம்பாறை மாவட்டத்தில் இருந்து சுற்றுலா வந்த 10 இளைஞர்கள் குளிப்பதற்காகச் சென்ற நிலையில் நான்கு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
இவ்வாறு நீர்வீழ்ச்சியில் காணாமல் சென்றவர்கள் அம்பாறை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22 முதல் 23 வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்கள் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கல்வி கற்று வருபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சி
வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சி கடந்த வருடம் (2022) செப்டம்பர் (06) முதல் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள மிக அழகிய நீர்வீழ்ச்சியான எல்லாவல நீர்வீழ்ச்சியை காணவும் நீராடவும் தினமும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
அண்மையில் நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று சிறு பிள்ளைகள் உட்பட பலர் உயிரிழந்ததையடுத்து எல்லாவல நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்க வெல்லவாய பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுத்திருந்தார்.
கடந்த வருடம் (2022) மார்ச் மாதம் 3ஆம் திகதி முதல் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த எல்லாவல நீர்வீழ்ச்சி கடந்த வருடம் (2022) செப்டம்பர் (06) முதல் மீண்டும் திறக்கப்பட்டிருந்தது.தற்போது அருவியை சுற்றி பாதுகாப்பு கயிறுகள் அமைக்கப்பட்டு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக நீர்வீழ்ச்சியைப் பார்வையிடுமாறு வெல்லவாய பிராந்திய சுற்றாடல் குழு வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்நிலையில் இவ்வனர்த்தமானது இடம்பெற்றுள்ளமை அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.