மாற்று திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கிய களுத்துறை மாவட்ட மூத்த பொலிஸ் பிரஜைகள் குழு..
களுத்துறை மாவட்டத்தை சோ்ந்த பொலிஸ் மூத்த பிரஜைகள் குழுவினால் வடமாகாண ஆளுநாிடம் வழங்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கள் இன்று பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டிருக்கின்றது.
பொலிஸ் மூர்த்த பிரஜைகள் குழுவினால் ஆளுநரினடம் கையளிக்கப்பட்ட நாற்காலிகளை ஆளுநரின் ஆலோசனைக்கு அமைவாக ஆளுநரின் உதவிச் செயலர் ஏ.எக்ஷ்.செல்வநாயகம்,
ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரி நிஸாந்தஅல்விஷ் ஆகியோர் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக எடுத்துச் சென்று இன்று கையளித்துள்ளனர். சரவணை கிழக்கு வேலணையை சேர்ந்த வேலுப்பிள்ளை சர்வானந்தன்,
தச்சந்தோப்பு சந்தி நாவற்குழியை சேர்ந்த ஞானசீலன் மேரி நிசாந்தினி ஆகிய மாற்றுத் திறனாளிகளுக்கு இவை வழங்கி வைக்கப்பட்டுள்ளன. களுத்துறை மாவட்டத்திலிருந்து நேற்று முன்தினம் (18) வருகை தந்திருந்த மூத்த பொலிஸ் பிரஜைகள் குழு
ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சுண்டுக்குளியில் அமைந்துள்ள அலுவலத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது யாழ் குடாநாட்டில் விசேட தேவையுடை இரு இளைஞர் யுவதிகளுக்கு அதிநவீன சக்கர நாற்காலிகள் இரண்டினையும் ஆளுநரிடம் கையளித்தனர்.
இந்நிகழ்வில் சமூக சேவைகள் திணைக்கள அதிகாரி வனஜா, ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், பிரதியேக செயலர் ஜே.எம் சோமசிறி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட ஆளுநர் றெஜினோல்ட்ட குரே, களுத்துறை மாவட்த்திலிருந்து நீங்கள் இவ்வாறான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
வடபகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தென்னிலங்கை மக்கள் உங்களை போன்று இயன்ற அளவு உதவிகளை செய்ய முன்வர வேண்டும். வட பகுதி மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றவர்களை மதிக்கும் பண்பு கொண்டவர்கள்.
அவர்களின் நல்ல உள்ளங்களை புரிந்து கொண்டு அந்த செய்தியினை நீங்கள் தென்னிலங்கைக்கு களுத்துறை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதன் ஊடாகவே பல பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும்.
நான் இங்கு யுத்தம் நடைபெற்றபோதும் வந்திருக்கின்றேன். தற்போது ஆளுநராக இங்கே பணி புரிகின்றேன். எனக்கு தமிழ் சிங்களம் ஆங்கிலம் போன்ற மும்மொழிகளும் தெரிந்ததன் காரணமாக இங்குள்ள மக்களை இலகுவில் நான் புரிந்து கொள்ள முடிந்தது.
என்னைபோன்று தென்னிலங்கை மக்கள் தமிழ் மொழியையும் வடக்கு தமிழ் மக்கள் சிங்களத்தினையும் தெரிந்து கொள்வதன் மூலம் மக்கள் தமது பிரச்சினைகளை தமக்குள் தீர்த்துக் கொள்ளும் அரிய சந்தர்ப்பம் உருவாகும்.
களுத்துறை மாவட்ட மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டபோது வட பகுதி மக்கள் 15 லொறிகளில் அம்மக்களுக்கான உதவிகளை நேரடியாக வந்து வழங்கியதை இச்சந்தர்ப்பத்தில் நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
இதேபோன்று ஒருவருக்கு ஒருவர் உறவாக இருக்கும் சந்தர்ப்பங்களை நாங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என உங்களை அன்பாக கேட்டுக்கொள்கின்றேன்.