100 ஆவது டெஸ்ட்டில் டக் அவுட்!! -மோசமான சாதனை பட்டியலில் இணைந்த புஜாரா-
பார்டர் - கவாஸ்கர் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அவுஸ்ரேலியா அணி விளையாடி வருகிறது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி முதல் இன்னிங்சில் 263 ஓட்டங்காலுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.
இதனையடுத்து முதல் இன்னிங்சில் இந்தியா விளையாடி வருகிறது. இந்த போட்டி புஜாராவுக்கு 100 ஆவது போட்டியாகும். இந்திய அணி 53 ஓட்டங்களுக்கு 2 இலக்குகளை இழந்து தடுமாறிய நிலையில் அப்போது களமிறங்கிய புஜாரா 100 ஆவது போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்த்த நிலையில் நாதன் லயன் பந்துவீச்சில், எல்.பி.டபள்யூ முறையில் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் மோசமான பட்டியலில் புஜாரா இணைந்துள்ளார். தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் டக்-அவுட் ஆன, 2 ஆவது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக இந்திய அணிக்காக விளையாடிய மற்றொரு வீரரான திலீப் வெங்சர்கார், 1988 ஆம் ஆண்டு அவர் பங்கேற்ற தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் டக்-அவுட் ஆனார். அதோடு, அவுஸ்ரேலியாவை சேர்ந்த ஜாம்பவானான ஆலன் பார்டர், மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த கோர்ட்னி வால்ஷ், அவுஸ்ரேலியா அணியின் முன்னாள் அணித்தலைவர் மார்க் டெய்லர், நியூசிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் ஸ்டீபன் ப்ளெமிங், இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் அலஸ்டெர் குக் மற்றும் நியூசிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் மெக்கல்லம் ஆகியோரும், தங்களது 100 ஆவது போட்டியில் டக்-அவுட் ஆகியுள்ளனர்.
மேலும் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், விராட் கோலி, வீரேந்திர சேவாக், முகமது அசாருதின் ஆகியோருக்கு பின், டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் ஏழாவது இடத்தில் புஜாரா உள்ளமை குறிப்பிடத்தக்கது.