SuperTopAds

கல்முனை பொது நூலகத்திற்கு பெயர் மாற்றம் செய்வதை மறுபரிசீலனை செய்யுங்கள்

ஆசிரியர் - Editor III
கல்முனை பொது நூலகத்திற்கு பெயர் மாற்றம் செய்வதை மறுபரிசீலனை செய்யுங்கள்

கல்முனை பொது நூலகத்திற்கு பெயர் மாற்றம் செய்வதை மறுபரிசீலனை செய்யுங்கள் இல்லாவிடின் இன முரண்பாடு உருவாக   வாய்ப்புள்ளது



கல்முனை பொது நூலகத்திற்கு பெயர் மாற்றம் செய்வதை மறுபரிசீலனை செய்யுங்கள் இல்லாவிடின் இன முரண்பாடு உருவாக   வாய்ப்புள்ளது  என கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மேற்கண்டவாறு தத்தமது கருத்துக்களில் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்

கல்முனை மாநகர சபை இம்மாத அமர்வில் கல்முனை பொது நூலகத்திற்கு முன்னாள் அமைச்சரான ஏ.ஆர்.எம் மன்சூர் என்பவரின் பெயரை சூட்டுவதாக தெரிவிக்கப்பட்டமை கண்டிக்கத்தக்கது.கடந்த காலங்களில் முன்னாள் அமைச்சராக செயற்பட்ட இவர் இன மத பேதங்களின்றி சேவைகள் செய்தவர்.இருந்த போதிலும் தற்போது எதிர்வரும்  தேர்தலை குறிவைத்து சிலர் இவ்விடயத்தை அரசியலாக்கி மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்.

எனவே கல்முனை பொது நூலகமானது இரு சமூகத்தை சேர்ந்தவர்களின் பொதுச்சொத்து.இந்த நூலகத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்படுவதை  சிலர் மறைமுகமாக முன்னெடுக்கின்றனர்.இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.சில அரசியல்வாதிகளே தங்களது அபிலாசைகளை நிறைவேற்ற இவ்வாறு செயற்படுகின்றனர்.தேர்தல் காலங்களில் தான் இவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர்.கல்முனை மாநகர கட்டடத்தில இயங்குகின்ற நூலகமானது கல்முனை பொது நூலகம் என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது.

ஆனால் ஒரு தனி நபரின் பெயரை இந்த நூலகத்திற்கு ஏன் தற்போது சூட்ட முயற்சிக்கின்றீர்கள் என கேட்கின்றோம்.தமிழ் மக்களாகிய நாங்கள் இந்த செயற்பாட்டை முற்றாக நிராகரிக்கின்றோம்.ஏனெனில் இனங்கள் இரண்டும் ஒன்றுபட்டது தான் கல்முனை பிரதேசம்.கல்முனை மாநகர சபை இரு சமூகத்திற்கும் சொந்தமானது.எனவே இனியாவது இச்செயற்பாடுகளை தவிர்த்து இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தாதீர்கள் என கேட்டுக்கொள்கின்றோம்.என குறிப்பிட்டனர்.

இவ் விசேட செய்தியாளர் சந்திப்பில் கல்முனை மாநகர உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன் வடிவுக்கரசு சந்திரன் கதிரமலை செல்வராஜா ஆகியோர் கலந்துகொண்டு  தத்தமது கருத்துக்களை தெரிவித்தனர்.