சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவு
சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவாகியுள்ளார்.
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் இராஜினாமா செய்தமையினால் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக்கான விசேட அமர்வு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் சபா மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை(14) இடம்பெற்றது.
அதன் பிரகாரம் பிரதேச சபையின் புதிய தவிசாளரைத் தெரிவு செய்யும் வகையில் இடம்பெற்ற அமர்வில் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் பெயர் மாத்திரமே தவிசாளர் பதவிக்காக முன்மொழியப்பட்டன. இதனால் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணனினால் ஏகமனதாக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளராக ஐ.எல்.எம்.மாஹிரின் பெயரை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆறு உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பத்து உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளித்தனர்.
இதில் அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ.கமல் நெத்மினி, கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் புலனாய்வு உத்தியோகத்தர் விசேட தரம் என்.ஐங்கரன், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், உதவித் தவிசாளர் ஏ.அச்சி முஹம்மட், பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.