SuperTopAds

நடன ஆசிரியர் நியமனம்- பல இலட்சம் மோசடி-கல்முனை பொலிஸாரினால் நால்வர் கைது

ஆசிரியர் - Editor III
நடன ஆசிரியர் நியமனம்- பல இலட்சம் மோசடி-கல்முனை பொலிஸாரினால் நால்வர் கைது

நடன ஆசிரியர் நியமனம் ஒன்றை பெற்றுத்தருவதாக கூறி பல இலட்சம் ருபாய்க்களை வங்கி ஊடாக  மோசடி செய்த குழுவினர்   கல்முனை தலைமையக பொலிஸார் விரித்த  வலையில் சிக்கியுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு கடந்த வியாழக்கிழமை(9)  அன்று கல்முனை பகுதியை சேர்ந்த பொன்னம்பலம் கணேசன் என்பவர் முறைப்பாடு ஒன்றினை அளித்திருந்தார்.

அந்த முறைப்பாட்டில்  நடன ஆசிரியர் நியமனம் ஒன்றினை பெறுவதற்கு கடந்த திங்கட்கிழமை(6) அன்று ஒரே நாளில் கட்டங்கட்டமாக முறையே 600000 120000 120000 என  840000 இலட்சம்  ரூபாய்க்களை  வங்கி ஊடாக ஒருவருக்கு வைப்பு செய்த நிலையில் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் இந்த நியமனத்தை தனது மகனுக்கு பெற்றுக்கொடுப்பதற்காகவே குறிப்பிட்ட பணத்தொகைகளை வழங்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.மேலும் இந்தியாவில் தனது மகன் நடன பாடத்தில் பட்டத்தை நிறைவு செய்திருந்த  இந்த நியமனத்தை பெற முயற்சித்திருந்ததாகவும் கல்வி அமைச்சில் உள்ள ஒரு பதவி நிலை உயர் அதிகாரியின் பெயரை பயன்படுத்தி இந்த மோசடி இடம்பெற்றுள்ளதை பின்னர் அறிந்துள்ளதாக அம்முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில்  கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிநடத்தலில்    கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்   ஆலோசனையில்    கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான  அலியார் றபீக் தலைமையில் சென்ற  பொலிஸ் கன்ஸ்டபிள்களான முஜிசாத் (88490) விஜிதரன்(90954) பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் செவ்வந்தி(13086) குழுவினர் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்களை பொலிஸ் விசேட பிரிவின் தகவல் ஒருங்கிணைப்பிற்கமைய கைது செய்துள்ளனர்.

இந் நடவடிக்கையில் 2 பெண்கள் 2 ஆண்கள் பொலிஸாரினால் திருகோணமலை மட்டக்களப்பு பகுதிகளில் இருந்து கைதாகியதுடன் விசாரணைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்விசாரணையின் போது கைதானவர்களின் வாக்குமூலத்தின் படி சிறைச்சாலை ஒன்றில் சிறைவாசம் அனுபவிக்கின்ற நபர் ஒருவரின் தொடர்பின் பின்விளைவாக இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறையில் உள்ளவரே தம்மை வழிநடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கைதான பெண் சந்தேக நபரின் வங்கி கணக்கில் தொடர்ச்சியாக அதிகளவான பணக்கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்று  வந்துள்ளதையும் பொலிஸார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.

அத்துடன் நடன ஆசிரியர் நியமனத்திற்காக மற்றுமொரு பெண் சந்தேக நபரின் வங்கி கணக்கிலக்கத்திற்கும் ஏனைய சந்தேக நபர்களது வங்கி கணக்கிலக்கத்திற்கும் ஒரு நாளில் எட்டு இலட்சத்தி 40 ஆயிரம் வைப்பிலடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த மோசடி கல்வி அமைச்சின் உள்ள அதிகாரி ஒருவரது பெயரை குறிப்பிட்டு மேற்கொள்ளப்பட்டள்ளதால் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அவரும் பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.மேலும் குறித்த அதிகாரியும் ஏற்கனவே தனது பெயரில்  இவ்வாறு மோசடி இடம்பெற்று வருவதாக கூறி பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு வழங்கி இருப்பதாக பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் இம்மோசடியில் கைதான அனைத்து சந்தேக நபர்களையும் ஞாயிற்றுக்கிழமை(12) அன்று கல்முனை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் வெள்ளிக்கிழமை(17) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் இவ்வாறான  செயற்பாடுகளை போன்று ஏதேனும் முறைப்பாடுகள் உள்ளனவா? அத்துடன் இவ்வாறான குழுக்களை உருவாக்கி சிறையில் இருந்து வழிநடத்தும் நபர்கள் தொடர்பிலும் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.