3 மாணவர்களின் உயிரை பறித்த படகு விபத்து, காப்பாற்ற முயற்சித்த ஆசிரியரும் உயிரிழந்த சோகம்...
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை - தந்தாமலை பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் மற்றும் 3 பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
தரம் 11 இல் கல்வி கற்கும் மூன்று பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவர் இதன்போது உயிரிழந்தனர். குறித்த படகு இன்று பிற்பகல் 1.45 மணியளவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதன்போது படகில் மூன்று மாணவர்கள் இருந்துள்ளனர்.
அவர்களை காப்பாற்ற குளத்தின் கரையில் இருந்த ஆசிரியர் ஒருவர் குளத்தில் குதித்துள்ள நிலையில் நான்கு பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் மூவர், நான்கு மாணவர்கள்
மற்றும் ஏழு மாணவிகளுடன் குறித்த பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களில், மூன்று மாணவர்கள் கைவிடப்பட்ட படகொன்றில் ஏரியில் பயணிததபோது இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
உயிரிழந்த 16 வயதுடைய 3 மாணவர்களும் 27 வயதுடைய ஆசிரியரும் வெல்லாவலி, களுதன்வெளி பகுதியைச் சேர்ந்தவர்களாவர். மரண விசாரணையின் பின்னர் சடலங்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.