11 வயது சிறுவனை அடித்துக் கொன்ற தாயின் 2வது கணவன், 26 வயதான சந்தேகநபர் கைது..!
தாயின் 2வது கணவனால் 11 வயதான சிறுவன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தொிவித்திருக்கின்றது.
தாக்குதலுக்கு உள்ளான 11 வயதுடைய சிறுவன் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பில் சிறுவனின் தந்தை கடந்த புதனன்று அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய மாத்தளையைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் 09 ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் வியாழனன்று உயிரிழந்ததாக வைத்தியசாலை பொலிஸாரினால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்தக் கொலை தொடர்பில் இன்று (10) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு பொலிஸாரினால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.