பிரதி பொலிஸ் மா அதிபர் கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு விஜயம்- டென்னிஸ் விளையாட்டரங்கு அமைக்க உறுதி

ஆசிரியர் - Editor III
பிரதி பொலிஸ் மா அதிபர் கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு விஜயம்- டென்னிஸ் விளையாட்டரங்கு அமைக்க உறுதி

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ   கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு விஜயம் செய்து  கல்லூரியில் டெனிஸ் விளையாட்டரங்கை அமைக்க ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு உதவுவதாக  உறுதியளித்துள்ளார்.

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் டெனிஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தி, மேம்படுத்துவது குறித்தும், அதற்காக டெனிஸ் விளையாட்டரங்கொன்றினை கல்லூரியில் அமைப்பது குறித்தும் கலந்துரையாடுவதற்காக, அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் திரு. தமயந்த விஜயஸ்ரீ  கடந்த செவ்வாய்க்கிழமை(31) அன்று கல்முனை ஸாஹிறாக் கல்லூரிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

இலங்கை டெனிஸ் சங்கத்தின் (Sri Lanka Tennis Association) உறுப்பினர் என்ற வகையில், அம்பாறை மாவட்டத்தின் முன்னணி பாடசாலைகளுள் ஒன்றாகிய கல்முனை ஸாஹிறாவில், டெனிஸ் விளையாட்டரங்கினை அமைப்பதில் தான் முன்னின்று செயலாற்றவுள்ளதாகவும், இதற்காக இலங்கை டெனிஸ் சங்கத்தின் ஒத்துழைப்பு பெறப்படுமெனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

கல்லூரியில் இதற்கான இடத்தை அடையாளம் காண்பது தொடர்பிலும், இதற்கான நிதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலுமான முதற்கட்டக் கலந்துரையாடல் கல்லூரி அதிபர் திரு எம்.ஐ.ஜாபிர் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. தொடர்ந்தும் அடுத்த கட்டக் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, விரைவில் கல்லூரியில் டெனிஸை அறிமுகப்படுத்துவதென பிரதிப் பொலிஸ்மா அதிபர் உறுதியளித்தார்.

கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக  கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட்  கல்லூரியின் பிரதி அதிபர்கள், முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பாடசாலை பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். 

இவ்விளையாட்டரங்கை கல்லூரிக்குக் கொண்டு வருவதற்கான பூர்வாங்க முயற்சிகளை கல்லூரியின் அதிபருடன் இணைந்து, பழைய மாணவர் சங்க உப தலைவர் பொறியியலாளர் எம்.ஆர்.எம். பர்ஹான்   மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு