தாலி கட்டும் நேரத்தில் ஓடிய மணமகன்!! -வேறு ஒருவரை திருமணம் மணப்பெண்-
திருமண நிகழ்வில் தாலி கட்டும் நேரத்திற்கு முன் மணமகன் திடீரென மாயமானதால் மணப்பெண்ணுக்கு மாற்று மணமகனுடன் திருமணம் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கு சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணிற்கும் நேற்று புதன்கிழமை தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.
மாலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணமக்கள் கலந்துகொண்டு அனைவரிடத்திலும் ஆசி பெற்றனர். பின்னர் இரவு 12 மணிவரை இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். பின்னர் அதிகாலை யாரிடமும் சொல்லாமல் மண்டபத்தை விட்டு மாப்பிள்ளை வெளியேறிவிட்டார்.
அதனைத் தொடர்ந்து மாப்பிள்ளையை பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. மணமகள் மற்றும் மணமகளின் பெற்றோர் அவர்களின் உறவினர்கள் உட்பட பலரும் அதிர்ச்சி அடைந்தனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த உற்றார் உறவினர்களும் கவலை அடைந்தனர்.
பின்னர் மணமகள் மற்றும் அவரின் பெற்றோர் உறவினர்கள் சிதம்பரம் அருகேயுள்ள வேளங்கிபட்டு கிராமத்தில் உள்ள மணமகள் வீட்டார் உறவினர் மகன் இளவரசனை மாற்று மாப்பிள்ளையாக தேர்வு செய்து குறிப்பிட்ட நேரத்தில் திருமணம் செய்து வைத்தனர்.
திருமண நேரத்தில் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்த சம்பவத்தால் சிதம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பெண் வீட்டார் சிதம்பரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் முன்னிலையில் திருமணத்திற்கு ஏற்பட்ட செலவுகளைப் பெற்றுக்கொண்டனர்.