சுமந்திரன் தமிழ்தேசிய கூட்டமைப்புக்குள் நுழைந்ததன் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டார்! கே.வி.தவராசா சாடல்..
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ்தேசிய கூட்டமைப்புக்குள் எந்த நோக்கத்திற்காக வந்தாரோ அந்த நோக்கத்தில் அவர் வெற்றியடைந்துவிட்டார். என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா கூறியுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்துவதற்கு யார் காரணம்? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
தமிழ்தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் ஒரே நிலைப்பாட்டில் உள்ள ஏனைய தமிழ் கட்சிகளையும் இணைத்துப் பயணிக்க வேண்டும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வந்துள்ளேன். ஆனால் அதிகாரம், பதவி ஆசை காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்தவர்கள் கூட்டமைப்புப் பிளவுக்குக் காரணமாக இருந்துள்ளார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூட்டமைப்புக்குள் இருக்கும் ஆமை சுமந்திரன் என பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் பேசினார். அவரது கருத்துத் தொடர்பில் தமிழ் மக்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒன்றாக இருந்தவர்கள் தொடர்பில்
பெயர் குறிப்பிடாமல் தூள் வியாபாரிகள் காட்டிக் கொடுப்பவர்கள் என விமர்சனம் செய்துள்ளார். செல்வம் அடைக்கலநாதன் கூட்டமைப்பு போல் இருக்கும் ஆமை சுமந்திரன் என வெளிப்படையாக பேசியுள்ளார். அதேபோன்று துணிவிருந்தால் சுமந்திரன் பெயர்களை குறிப்பிட்டு பேசியிருக்க வேண்டும்.
ஆகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்றால் ஒரு கட்சியை குறிப்பிடுவது அல்ல ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் இணைந்து இருப்பதே கூட்டமைப்பு என அவர் மேலும் தெரிவித்தார்.